340 படைப்புகளுடன் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி நாராயணசாமி தொடங்கி வைத்தார்

340 படைப்புகளுடன் கூடிய புதுவை மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சியை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2019-11-19 00:38 GMT
புதுச்சேரி,

இளம் அறிவியல் விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்கில் புதுச்சேரி அரசின் பள்ளிக்கல்வி இயக்கம் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியினை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு புதுச்சேரி மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சியின் தொடக்க விழா ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.

விழாவுக்கு கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பங்கேற்று, கண்காட்சியை திறந்து வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் ஜான்குமார் எம்.எல்.ஏ., பள்ளிக்கல்வி இயக்குனர் ருத்ரகவுடு, இணை இயக்குனர் குப்புசாமி, முதன்மை கல்வி அதிகாரி மீனாட்சி சுந்தரம், கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் மோகன்பிரசாத், துணை ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட் தொம்னிக் ராயன், ஜீவானந்தம் பள்ளியின் துணை முதல்வர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நிலையான வளர்ச்சிக்கு அறிவியலும் தொழில்நுட்பமும் என்ற தலைப்பில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் அறிவியல், விவசாயம், மருத்துவம், நீர்மேலாண்மை, விண்வெளி ஆய்வு உள்பட 340 படைப்புகளை கண்காட்சியில் வைத்துள்ளனர்.

மண்டல அளவிலான கண்காட்சியை தொடர்ந்து வருகிற 21, 22 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடக்கிறது. இதில் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சியில் தேர்வு செய்யப்படும் சிறந்த படைப்புகள் இடம்பெறுகின்றன.

இந்த கண்காட்சியை அனைத்து பள்ளி மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகள்