அரசு நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க எதிர்ப்பு அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை

தடிக்காரன்கோணம் ஊராட்சியில் அரசு நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

Update: 2019-11-19 23:00 GMT
அழகியபாண்டியபுரம்,

தடிக்காரன்கோணம் ஊராட்சியில் இந்திராநகர் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 10½ ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தேக்கு போன்ற உயர்ரக மரங்கள் உள்ளன. இங்கு விளையாட்டு மைதானம் அமைக்க ஊராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், இந்த நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க வருவாய்துறையினர் முடிவு செய்ததாக தெரிகிறது. அவ்வாறு வனத்துறையிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் இங்கு விளையாட்டு மைதானம் உள்பட எந்தவித கட்டுமான பணிகளும் செய்ய முடியாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

முற்றுகை

இந்தநிலையில், நேற்று நில அளவையர் ஞானசேகர் மற்றும் அதிகாரிகள் நிலத்தை அளந்து வனத்துறையிடம் ஒப்படைப்பதற்காக சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதியில் கூடினர். அவர்கள் நிலத்தை அளக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆஸ்டின் எம்.எல்.ஏ. மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் பூதலிங்கம், தோவாளை ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், முன்னாள் கவுன்சிலர் சுஜாதா, பிராங்கிளின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

கீரிப்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆஸ்டின் எம்.எல்.ஏ. மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அரசு நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைப்பது தொடர்பாக கலெக்டரிடம் முறையிட்டு தீர்வு காண்பது என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் திரும்ப சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்