பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாசில்தாரிடம் மனு அளிக்கும் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பொன்னமராவதி தாசில்தாரிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-11-19 23:00 GMT
பொன்னமராவதி,

பொன்னமராவதி தாசில்தார் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர், தாசில்தாரிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வாசு தலைமை தாங்கினார். ஒன்றிய அமைப்பாளர் பிரதாப்சிங் முன்னிலை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் வி.பி.நாகலிங்கம் போராட்டத்தை தொடங்கி வைத்தார். விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சாத்தையா விளக்க உரையாற்றினார்.

போராட்டத்தில் 60 வயது நிரம்பிய விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். விதவைகள், முதியோர்கள், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளி உள்ளிட்ட அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். ஏற்கனவே முதியோர்களுக்கு வழங்கி வந்த உதவித்தொகை வராத முதியவர்களுக்கும் உடனடியாக வழங்கிட வேண்டும்.

உழவர் பாதுகாப்பு அட்டை

பொன்னமராவதி வட்டத்தில் வீட்டுமனை பட்டா இல்லாமல் குடியிருக்கும் அனைத்து பகுதி மக்களுக்கும் உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும். பொன்னமராவதி வட்டத்தில் குடியிருக்க இடம் இல்லாத அனைவருக்கும் மனையிடம் வழங்கி ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டித்தர வேண்டும். தற்போது அரசு புறம்போக்கு, கோவில் புறம்போக்கு ஆகியவற்றில் வீடு கட்டி குடியிருப்போருக்கு உடனடியாக பட்டா வழங்கிட வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் இருக்கும் முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்பு அட்டை வழங்கிட வேண்டும். நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்க ஏ.ஏ.ஒய். குடும்ப அட்டையாக மாற்றி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாசில்தார் திருநாவுக்கரசுவிடம் மனு அளித்தனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதில் செல்வம், வெள்ளைக்கண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்