தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலங்களில் புகுந்து காட்டு யானை அட்டகாசம் விவசாயிகள் கவலை

தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலங்களில் புகுந்து ஒரு காட்டு யானை பயிர்களை மிதித்தும், தின்றும் அட்டகாசம் செய்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2019-11-19 22:30 GMT
தேன்கனிக்கோட்டை,

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து தமிழக எல்லையான கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிக்குள் 10-க்கும் மேற்பட்ட யானைகள் வந்தது. இந்த யானைகள் கூட்டத்தில் இருந்து ஒரு காட்டு யானை பிரிந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வந்தது. இந்த யானை நேற்று முன்தினம் வனப்பகுதியையொட்டி உள்ள கிரியானஅள்ளி, ஆலஅள்ளி கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களில் உள்ள வாழை, ராகி உள்ளிட்ட பயிர்களை மிதித்தும், தின்றும் அட்டகாசம் செய்தது. இதுகுறித்து விவசாயிகள் தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வனச்சரகர் சுகுமார் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று யானையின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர். அப்போது யானைகள் நடமாட்டம் இருந்ததால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வனப்பகுதியையொட்டி உள்ள கிராமமக்கள் இரவு நேரங்களில் வீட்டின் முன்பு முகப்பு விளக்கை எரிய வைக்க வேண்டும். யானைகள் செல்லும் பாதையை யாரும் ஆக்கிரமிப்பு செய்ய கூடாது என்று அறிவுறுத்தினர்.

விவசாயிகள் கவலை

மேலும் ஒற்றை யானை நடமாட்டம் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும், தண்டோரா போட்டும் வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வனப்பகுதியில் ஒற்றை காட்டு யானை விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை மிதித்தும், தின்றும் அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். யானைகள் விவசாய நிலங்களில் புகுவதை தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்