ஓமலூர் அருகே மாணவி பலாத்கார வழக்கில் விசாரணை அதிகாரிகள் மாற்றம்

ஓமலூர் அருகே 2-ம் வகுப்பு மாணவி பலாத்கார வழக்கில் விசாரணை அதிகாரிகளை மாற்றி போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார்.

Update: 2019-11-19 22:30 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 வயதுடைய 2-ம் வகுப்பு மாணவி அங்கு உள்ள பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது ஒரு கும்பல் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஒடி விட்டது. இது குறித்து மாணவியின் பெற்றோர் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க ஓமலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராணி, தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னசாமி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.. ஆனால் இந்த வழக்கில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

விசாரணை அதிகாரிகள் மாற்றம்

இதில் குற்றவாளிகள் குறித்த எந்தவித துப்பும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதனால் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் சிறுமி பாலியல் வழக்கில் விசாரணை அதிகாரிகளாக இருந்த போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகளை மாற்றி போலீஸ் சூப்பிரண்டு தீபாகனிக்கர் உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகளாக புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு உமாசங்கர், மல்லூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்அம்சவள்ளி ஆகியோரை நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.

மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்ட தகவல் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்