திருச்செங்கோடு அருகே அரசு பஸ்சை மீண்டும் இயக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருச்செங்கோடு அருகே அரசு பஸ்சை மீண்டும் இயக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-11-19 23:00 GMT
திருச்செங்கோடு,

திருச்செங்கோட்டில் இருந்து ஆனங்கூர் செல்லும் சாலையில் சட்டையம்புதூர், சூரியம்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவிகள், பொதுமக்கள் சூரியம்பாளையம் மாரியம்மன் கோவில் பகுதிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அந்த வழியாக குமாரபாளையத்தில் இருந்து ஆனங்கூர் மெயின் ரோடு வழியாக திருச்செங்கோட்டிற்கு சென்ற அரசு பஸ்சை மறித்தனர்.

இதையடுத்து பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வழியாக வந்த கார், மோட்டார் சைக்கிள்கள் மறியல் காரணமாக ஸ்தம்பித்து நின்றன. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வசதியாக தினமும் காலை 8 மணிக்கு ஆனங்கூர் மெயின்ரோடு வழியாக திருச்செங்கோட்டிற்கு செல்ல அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது.

போக்குவரத்து பாதிப்பு

ஆனால் கடந்த ஒரு வார காலமாக இந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள், கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அவதியுற்று வருகிறோம் என்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருச்செங்கோடு டவுன் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்