ஆசிரியரை கட்டியணைத்து: மாணவ-மாணவிகள் பாச போராட்டம் பணி இடமாற்றம் செய்யப்பட்டதால், பீதரில் நெகிழ்ச்சி சம்பவம்

பணி இடமாற்றம் செய்யப்பட்டதால் ஆசிரியரை கட்டியணைத்து மாணவ-மாணவிகள் தேம்பி, தேம்பி அழுது பாசப்போராட்டம் நடத்தினர். இது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Update: 2019-11-19 23:07 GMT
பீதர்,

கலபுரகி மாவட்டம் குலஉள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் அனில் ரத்தோடு. இவர் பீதர் மாவட்டம் உம்னாபாத் தாலுகா சிஞ்சோலி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் கன்னட ஆசிரியராக 9 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர் மாணவ-மாணவிகளிடம் மிகவும் பாசமாகவும், கனிவாகவும் நடந்து கொண்டுள்ளார். மேலும் அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் அவர்களிடம் பேசி அதை சுமுகமாக தீர்த்து வைப்பார் என்று கூறப்படுகிறது.

மாணவ-மாணவிகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டால் அவர்களின் வீட்டிற்கு சென்று நலம் விசாரிப்பதை ஆசிரியர் அனில் ரத்தோடு வழக்கமாக வைத்திருந்தார் என்று சொல்லப்படுகிறது. இதனால் ஆசிரியர் அனில் ரத்தோடுவுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் இடையே நல்லுறவு இருந்துள்ளது. மாணவ-மாணவிகள் ஏதேனும் தவறு செய்தால் அவர்களை தண்டிக்காமல் அவர்களிடம் தவறை எடுத்து கூறி நல்வழிப்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு பணி இடமாற்றம் வழங்கி கல்வித்துறை உத்தரவிட்டது.

இந்தநிலையில் அவருக்கு பள்ளியின் சார்பில் பிரிவுபசார விழா நடந்தது. பின்னர் அங்கிருந்து ஆசிரியர் அனில் ரத்தோடு வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அங்கு திரண்ட மாணவ-மாணவிகள் அவரை கட்டித்தழுவி கண்ணீர்விட்டு தேம்பி, தேம்பி அழுது பாசப்போராட்டம் நடத்தினர். இது அங்கு இருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் சிலர் அந்த நிகழ்வுகளை தங்களின் செல்போன்களில் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் செய்திகள்