திருப்பத்தூர் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

திருப்பத்தூர் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-11-20 22:45 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூரை அடுத்த கதிரிமங்கலம் நேருநகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகிறார்கள். இவர்களுக்கு 2 ஆழ்துளை கிணறுகள் மூலம்குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆழ்துளை கிணறுகளில் உள்ள மின்மோட்டார்கள் பழுதானதாக கூறப்படுகிறது.

இதனால் நேருநகர் பகுதி மக்களுக்கு கடந்த 2 மாதங்களாக குடிநீர் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டு, பொதுமக்கள் குடிநீருக்காக அவதிப்படுகிறார்கள். இதுபற்றி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் புகார்தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

சாலைமறியல்

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் திரண்டுவந்து திருப்பத்தூர்- புதுப்பேட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதன்காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் வட்டாரவளர்ச்சி அலுவலர் முருகேசன் மற்றும் திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்துசென்றனர்.

மேலும் செய்திகள்