மாயமான புதுமாப்பிள்ளை வனப்பகுதியில் தூக்கில் பிணமாக கிடந்தார் கொலையா? போலீசார் விசாரணை

கொல்லிமலையில் மாயமான புதுமாப்பிள்ளை வனப்பகுதியில் தூக்கில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-11-20 22:15 GMT
சேந்தமங்கலம்,

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் குண்டூர்நாடு ஊராட்சி தீவெட்டிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 24). இவருக்கும், கலாவதி (20) என்ற பெண்ணுக்கும் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் சிவராஜின் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி மாட்டிற்கு புல் கொண்டு வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் சொல்லிவிட்டு வெளியே சென்ற சிவராஜ், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தார் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தார் கடந்த 18-ந் தேதி கொல்லிமலை வாழவந்திநாடு போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் சிவராஜை தேடிவந்தனர்.

பிணமாக கிடந்தார்

இந்த நிலையில் தீவெட்டிக்காடு அருகே உள்ள வனப்பகுதியில் ஒரு மரத்தில் கயிற்றில் தூக்கில் தொங்கியவாறு ஒரு ஆண் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, மாயமான சிவராஜ்தான் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து பிணத்தை மீட்டு, அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவராஜ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 6 மாதங்களில் புதுமாப்பிள்ளை தூக்கில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்