செஞ்சி அருகே அனந்தபுரத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

செஞ்சி அருகே உள்ள அனந்தபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Update: 2019-11-20 23:00 GMT
செஞ்சி,

செஞ்சி தாலுகா அனந்தபுரத்தில் நீண்ட நாட்களாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தது. இதனால் பஜார் சாலையில் ஒரு பஸ் செல்லும் அளவுக்கே இடம் இருந்தது. சிறு வியாபாரிகள், வடிகால் வாய்க்கால் மீது கடை வைத்தும் தள்ளு வண்டிகளை நிறுத்தி வைத்தும் வியாபாரம் செய்து வந்தனர். ஒரு சிலர் வடிகால் வாய்க்கால் மீது கடைகள் கட்டியும் வியாபாரம் செய்து வந்தனர். இதனால் பஜாரில் பொதுமக்கள் நடந்து செல்லக்கூட இடமில்லாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில் அனந்தபுரம் பஜாரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அனந்தபுரம் மசூதியில் இருந்து மாதா கோவில் வரை உள்ள பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகள் முழுவதும் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் சாலை பணியாளர்கள் ஈடுபட்டனர். இதையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ் தலைமையில் கஞ்சனூர் இன்ஸ்பெக்டர் ஜீவ மணிகண்டன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் கருத்து

இது பற்றி பொதுமக்கள் கூறுகையில், இந்தியன் வங்கிக்கு செல்லும் பவுண்டு சாலை, புதுத்தெரு, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் தென்புதுத்தெரு ஆகிய சாலைகளில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால் போக்குவரத்திற்கு பெரும் சிரமமாக உள்ளது. வங்கிக்கு செல்வோரும், பள்ளி மற்றும் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு செல்லும் பொது மக்களும் இந்த சாலையை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த சாலைகளில் ஆக்கிமிப்புகளை அகற்றவில்லை. பிரதான சாலையில் மட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றி பயன் இல்லை. குறுக்கு சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றினால்தான் போக்குவரத்து சீரடையும் என்றனர். எனவே பொதுமக்களின் கருத்துக்களையும் மதித்து குறுக்கு சாலைகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்