கவனமுடன் குளிக்க வேண்டும்: வைகை ஆறு கரையோரங்களில் எச்சரிக்கை தகவல் பலகை

நிலக்கோட்டை பகுதியில் வைகை ஆறு கரையோரங்களில் கவனமுடன் குளிக்க வேண்டும் என்று எச்சரிக்கை தகவல் பலகை வைக்கப்பட்டது.

Update: 2019-11-21 21:45 GMT
நிலக்கோட்டை, 

வைகை ஆற்றில் கடந்த 2 வாரங்களாகவே அதிக அளவில் தண்ணீர் செல்கிறது. அவ்வப்போது திடீர் வெள்ளமும் ஏற்படுகிறது. இதற்கிடையே தேனி மாவட்டம் வருசநாடு, ஆண்டிப்பட்டி மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாகவும், வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட அதிக அளவிலான தண்ணீர் காரணமாகவும் தற்போது வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறிப்பாக நிலக்கோட்டை பகுதியில் உள்ள வைகை ஆற்றில் வெள்ளம் அதிகம் செல்கிறது. இதனால் வைகை ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் பல்வேறு இடங்களில் ஆற்றில் இறங்கி துணி துவைப்பது, குளிப்பது உள்ளிட்டவற்றை பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அணைப்பட்டி வைகை ஆற்றில் மூழ்கி சென்னையை சேர்ந்த அண்ணன்-தம்பி பரிதாபமாக இறந்துபோனார்கள். இதுதவிர தேனி மாவட்டத்திலும் வைகை ஆற்றில் மூழ்கி சிறுவர்கள் உள்பட 4 பேர் ஒரே நாளில் இறந்துபோன சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு ஆழமான பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதேபோல் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் உள்ள வைகை ஆற்றங்கரையோரத்தில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையில் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றின் கரையோரங்களில் கடந்த சில தினங்களாக போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் வைகை ஆற்றில் பள்ளங்கள் அதிகமாக இருக்கிறது, எனவே யாரும் குளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்து வருவதுடன், முக்கியமான இடங்களில் எச்சரிக்கை தகவல் பலகை வைத்துள்ளனர். எனவே அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஆற்றில் குளிக்கும்போது கவனமாக குளிக்க வேண்டும் என்று போலீசார் தரப்பிலும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்