தமிழகத்தில் விவசாயிகளுக்கு ரூ.46,350 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது - அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ரூ.46 ஆயிரத்து 350 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

Update: 2019-11-21 22:45 GMT
நெல்லை,

66-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா, மாநில அளவிலான விழா பாளையங்கோட்டையில் நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், நெல்லை மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் தச்சை கணேசராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் பதிவாளர் செந்தமிழ்செல்வி வரவேற்று பேசினார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கோவிந்தராஜ் திட்ட அறிக்கை வாசித்தார்.

அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜலட்சுமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகளை வழங்கி பேசினார்கள். மேலும் 3 ஆயிரத்து 364 பேருக்கு ரூ.38 கோடியே 51 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:- தமிழகத்தில் அமைதி, வளம், வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தை கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 19 ஆயிரத்து 921 கூட்டுறவு சங்கங்கள் பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகின்றன. விவசாயிகளுக்கு 2 மடங்கு உற்பத்தி, 3 மடங்கு விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2011-ம் ஆண்டு முதல் இதுவரை 87 லட்சத்து 89 ஆயிரத்து 930 விவசாயிகளுக்கு ரூ.46 ஆயிரத்து 350 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது. தி.மு.க.வின் 5 ஆண்டு கால ஆட்சியில் ரூ.9 ஆயிரத்து 163 கோடி தான் பயிர்க்கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் ரூ.10 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். இந்த ஆண்டு இதுவரை 6 லட்சத்து 31 ஆயிரத்து 308 பேருக்கு ரூ.4 ஆயிரத்து 560 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் ரூ.100 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது 1 கோடியே 85 லட்சம் ரேஷன் கார்டுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாக 10 லட்சம் பேருக்கு இலவச அரிசி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. சிறுவணிகர் கடன் ரூ.50 ஆயிரம் வரை வழங்க உத்தரவிட்டு உள்ளது. இதன்மூலம் 15 லட்சம் வியாபாரிகள் பயனடைந்து உள்ளனர்.

அம்மா மருந்தகம் மூலம் 20 சதவீத தள்ளுபடியில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. 103 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகளும், 79 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. கூட்டுறவு இணையத்தின் சார்பில் 33 பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்பட்டு உள்ளன. இப்படி மக்களுக்கு தேவையான திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தியதால் தான் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி கிடைத்து உள்ளது.இவ்வாறு அவர் கூறினார் .


விழாவில் ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ., நெல்லை ஆவின் தலைவர் சுதாபரமசிவன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சண்முகசுந்தரம், அ.தி.மு.க. மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பரணிசங்கரலிங்கம், பாளையங்கோட்டை ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், நபார்டு வங்கி மேலாளர் சலீமா உள்பட பலர் கலந்து கொண்டனர். சூப்பர் மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்