வலைகள்- பரிசல்கள் மானியத்தில் வாங்க மீனவர்கள் விண்ணப்பிக்கலாம்

வலைகள்– பரிசல்கள் மானியத்தில் வாங்க மீனவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சாந்தா கூறியுள்ளார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

Update: 2019-11-22 22:00 GMT
பெரம்பலூர், 

2019–20–ம் ஆண்டு தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், உள்நாட்டு மீனவர்கள் மீன்பிடி வலைகள் மற்றும் கண்ணாடி நாரிழையிலான பரிசல்கள் வாங்கிட 40 சதவீதம் மானியம் வழங்கப்படவுள்ளது. எனவே, இத்திட்டத்தின் கீழ் விருப்பமுள்ள உள்நாட்டு மீனவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு 24 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படுவதுடன், உள்நாட்டு நீர்நிலைகளில் மீன்பிடிக்கும் மீனவர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலனை செய்யப்படும்.

இத்திட்டத்தின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் கண்ணாடி நாரிழையிலான பரிசல்கள் பெறாதவர்கள் மற்றும் கடந்த 3 ஆண்டுகளில் வலை மானியம் பெறாதவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2–வது தளத்தில் அறை எண் 234–ல் இயங்கும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம். மேலும் அந்த அலுவலகத்தின் தொலைபேசி எண்ணான 04329–228699 என்ற எண்ணையும், பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் (கிழக்கு) எஸ்.கே.சி. நகரில் உள்ள மீன்துறை ஆய்வாளர் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்