ரெயில்வே பாதுகாப்பு படை சங்க நிர்வாகிகள் நியமனத்துக்கு எதிரான நடவடிக்கை ரத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ரெயில்வே பாதுகாப்பு படை சங்க நிர்வாகிகள் நியமனத்துக்கு எதிரான நடவடிக்கையை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-11-23 23:00 GMT
மதுரை,

ரெயில்வே பாதுகாப்பு படையினர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவரும், திருச்சி கோட்ட சங்கத்தின் செயலாளருமான முனியாண்டி, தலைவர் மணிவண்ணன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

ரெயில்வே பாதுகாப்பு படையினர் சங்கம் தொடங்க 26 நிபந்தனைகளுடன் கடந்த 1996-ம் ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த 2008-ம் ஆண்டுக்கு பின்பு, சங்க விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, மத்திய சங்கம், கோட்டம் மற்றும் மண்டலம் என 3 கிளை அமைப்பாக எங்கள் சங்கம் மாற்றப்பட்டது. இதன்படி சங்க நிர்வாகிகளுக்கு அலுவலகம், சிறப்பு விடுப்பு உள்ளிட்ட சில சலுகைகள் ரெயில்வே நிர்வாகத்தால் தரப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 2010-ம் ஆண்டில் அகில இந்திய அளவில் பொதுச்செயலாளர் மற்றும் தலைவர் பதவிகளில் ஓய்வு பெற்றவர்களும் தொடரலாம் என சங்க விதியில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். பின்னர் கடந்த ஜனவரி மாதம் 8-ந்தேதி டெல்லி ரெயில்வே பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில், தற்போதைய ரெயில்வே பாதுகாப்பு படை சங்க நிர்வாகிகள் தேர்வு செல்லாது எனவும், இந்த நடவடிக்கை சங்க விதிகளுக்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளார்.

விளக்கம் அளிக்கவில்லை

இதை பின்பற்றியே, முதன்மை தலைமை பாதுகாப்பு கமிஷனர் மற்றும் கோட்ட பாதுகாப்பு கமிஷனர் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். எந்த விளக்கமும் அளிக்காமல் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். எனவே சங்க நிர்வாகிகள் நியமனத்தை அங்கீகரிக்க மறுக்கும் ேமலதிகாரிகளின் உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். சங்க நிர்வாகிகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் ஒய்.கிருஷ்ணன் ஆஜராகி, "சங்க விதிகளில் திருத்தம் செய்த பிறகு நிர்வாகிகள் தேர்விற்கு இயக்குனர் ஜெனரல் ஒப்புதல் அளித்துள்ளார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் மனுதாரர் சங்கத்தினர் எந்த வகையில் விதிகளை மீறியுள்ளனர் என்ற விவரத்தை மேலதிகாரிகள் தெரிவிக்கவில்லை" என வாதாடினார்.

ேமலதிகாரிகளின் நடவடிக்ைக ரத்து

விசாரணை முடிவில் நீதிபதி, "சங்க நிர்வாகிகள் நியமனத்தில் எந்த வகையில் விதிமீறல் நடந்துள்ளது என்று தெரிவிக்கப்படவில்லை. சங்க நிர்வாகிகள் நியமனத்துக்கு எதிராக ரெயில்வே பாதுகாப்பு படை டி.ஐ.ஜி., முதன்மை தலைமை பாதுகாப்பு கமிஷனர், கோட்ட பாதுகாப்பு கமிஷனர் ஆகியோர் பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகிறது. தேவைப்படும்பட்சத்தில் புதிதாக உத்தரவு பிறப்பிக்கலாம்" என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்