கள்ளக்காதல் விவகாரம்: நெல்லையில் கொன்று புதைக்கப்பட்ட இளம்பெண் அடையாளம் தெரிந்தது தந்தை-அண்ணனிடம் விசாரணை

நெல்லையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கொன்று புதைக்கப்பட்ட இளம்பெண்ணின் அடையாளம் தெரிந்தது. அவருடைய தந்தை, அண்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-11-23 22:30 GMT
நெல்லை,

நெல்லை டவுன் செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 20). ராமையன்பட்டியை சேர்ந்தவர் ஆசீர்செல்வம் (32). இவர்கள் 2 பேரையும் கொலை மிரட்டல் சம்பவம் தொடர்பாக போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணை கொன்று நயினார்குளம் வாய்க்கால் கரையில் புதைத்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும், கள்ளக்காதல் விவகாரத்தில் அந்த பெண் கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது, சேரன்மாதேவி அருகே உள்ள சக்திகுளத்தை சேர்ந்த சிவா என்ற சிவகுமாருக்கும் (36), அந்த பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்து உள்ளது. இந்த நிலையில் சிவாவிடம் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியதால், அவரை கொலை செய்து புதைத்து விட்டு தலைமறைவாகி விட்டனர் என்ற விவரம் தெரிந்தது.

இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மும்பையில் பதுங்கி இருந்த சிவாவை கைது செய்தனர். அவரை நெல்லைக்கு அழைத்து வந்து இளம்பெண்ணை புதைத்த இடத்தை அடையாளம் காட்ட செய்தனர். அந்த இடத்தில் தோண்டி பெண்ணின் எலும்புகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர்.

அந்த பெண் பற்றி விசாரித்தபோது, நெல்லை ரெட்டியார்பட்டி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் பு‌‌ஷ்பா. விதவையான இவர் பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார். அவர் 2013-ம் ஆண்டு மே மாதம் நெல்லையில் உள்ள பீடி கம்பெனிக்கு தான் தயாரித்த பீடிகளை ஒப்படைக்க வந்து சென்றபோது அவருக்கும், தனக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக சிவா தெரிவித்து உள்ளார். ஆனால், பு‌‌ஷ்பாவின் முகவரியை சிவா தெரிந்திருக்கவில்லை. இதனால் பு‌‌ஷ்பா குறித்து போலீசாருக்கு முழுமையான தகவல் கிடைக்காமல் இருந்தது.

இந்த நிலையில் போலீசார் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட எல்லை பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று அந்த பெண் பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணைக்கு நேற்று பலன் கிடைத்தது.

அதாவது கொலை செய்யப்பட்ட பெண், தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை அடுத்த சேரகுளம் மகிழ்ச்சிபுரம் வேதக்கோவில் தெருவை சேர்ந்த மகாராஜன் என்பவருடைய மகள் பு‌‌ஷ்பா (28) என்பது தெரியவந்தது. இவருக்கு கிப்சன் டேனியல் என்பவருடன் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடைபெற்று உள்ளது. 2012-ம் ஆண்டு வாக்கில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து பு‌‌ஷ்பாவை மகிழ்ச்சிபுரத்தில் பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு கிப்சன் டேனியல் பிரிந்து சென்று விட்டார். அதன்பிறகு பு‌‌ஷ்பா பெற்றோர் வீட்டில் இருந்து ரெட்டியார்பட்டி வழியாக அவ்வப்போது நெல்லைக்கு பீடி கம்பெனிக்கு வந்து சென்றுள்ளார். அப்போது சிவாவுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்ற பரபரப்பு தகவல் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நேற்று போலீசார் பு‌‌ஷ்பாவின் குடும்பத்தினரை தச்சநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்தனர். அதன்படி தந்தை மகாராஜன், அண்ணன் ஸ்டீபன் ஆகிய இருவரும் தச்சநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அங்கு டவுன் போலீஸ் உதவி கமி‌‌ஷனர் மகாராஜன், இன்ஸ்பெக்டர் வனசுந்தர் ஆகியோர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது பு‌‌ஷ்பா கணவரை பிரிந்த பிறகு பல்வேறு இடங்களுக்கு சுற்றித்திரிந்து உள்ளார். அதனால் அவர் எங்கேனும் சென்றிருப்பார் என்று கருதி தேடாமல் விட்டு விட்டோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரிடமும் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்து அனுப்பி வைத்தனர்.

பு‌‌ஷ்பாவின் குடும்பத்தினர் குறித்த தகவல் கிடைத்து விட்டதால், இனிமேல் டி.என்.ஏ. எனப்படும் மரபணு பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். அதாவது, தோண்டி எடுக்கப்பட்ட எலும்புகளை கொண்டு, இறந்தவர் ஆணா? பெண்ணா? அவரது வயது, புதைக்கப்பட்ட ஆண்டு போன்ற விவரங்கள் முதலில் ஆய்வு செய்யப்படுகிறது. பின்னர் அந்த எலும்பில் உள்ள மரபணு விவரங்களை எடுத்து, பு‌‌ஷ்பாவின் தந்தை அல்லது அண்ணனின் மரபணுவுடன் ஒப்பிட்டு பார்த்து, கொன்று புதைக்கப்பட்டது பு‌‌ஷ்பாதானா? என்பதை போலீசார் உறுதி செய்ய உள்ளனர்.

இந்த கொலை சம்பவம் நடைபெற்றபோது சிவாவின் முதல் மனைவி உமாவுக்கும், சிவாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. எனவே, உமாவுக்கு கொலையில் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. கொலை சம்பவத்துக்கு பிறகு உமா, சிவாவை பிரிந்து விட்டார். இதையடுத்து போலீசார் இந்த வழக்கு தொடர்பாக உமாவை தேடி வருகின்றனர். அவருடன் தலைமறைவாக உள்ள தியாகு என்பவரையும் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்