வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

ஜெயங்கொண்டம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-11-24 23:00 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமம் தண்டலை ரோட்டு தெருவை சேர்ந்தவர் ராமானுஜம் (வயது 48). இவர் ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் பஸ் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஒரு குடிசையும், புதிய வீடும் என 2 வீடுகள் உள்ளன. இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு ஜெயங்கொண்டம் போக்குவரத்து பணிமனை கழகத்திற்கு இரவு பணிக்காக தனது புதிய வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.

இவரது மனைவி ராதா(35), தாய் ஜெகதாம்பாள் மற்றும் மகன், மகள் ஆகியோர் பழைய குடிசையில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தனர். இந்நிலையில் இரவு பணி முடிந்து நேற்று காலை ராமானுஜம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, புதிய வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த, 7 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி குத்துவிளக்குகள், கொலுசுகள் உள்பட ரூ.20 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

இதுகுறித்து உடனே ராமானுஜம் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்