ரூ.2 ஆயிரம் நோட்டு செல்லாது என்று கூறி ரூ.79 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் பெண்கள் உள்பட 5 பேர் கைது

ரூ.2 ஆயிரம் நோட்டு செல்லாது என்று கூறி பெரம்பலூரில் ரூ.79 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-11-24 22:15 GMT
பெரம்பலூர்,

மத்திய அரசு ரூ.2 ஆயிரம் நோட்டை விரைவில் செல்லாது என்று அறிவிக்க இருப்பதாகவும், அதனால் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் இருந்தால், ரூ.500 நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்றும், அதற்கு கூடுதலாக கமி‌‌ஷன் தொகை தருவதாகவும் பெரம்பலூர் எசனை பாப்பாங்கரையை சேர்ந்த சுரே‌‌ஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் மதுரையை சேர்ந்தவர்களிடம் கூறியதாக தெரிகிறது. இதனை நம்பி கடந்த 19-ந் தேதி பிலிக்ஸ், ஜாகீர் ஆகியோர் மற்றும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த மூம்மூர்த்தி, சவுந்தரபாண்டியன், கார்த்தி, லெட்சுமணன், வினோத் உள்ளிட்டோர் 2 கார்களில் ரூ.78 லட்சத்து 80 ஆயிரத்தை பெரம்பலூருக்கு கொண்டு வந்துள்ளனர்.

அப்போது அவர்களிடம் இருந்து, சுரே‌‌ஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் ரூ.78 லட்சத்து 80 ஆயிரத்தை கொள்ளையடித்து கொண்டு ஒரு காரில் தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சுரே‌‌ஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மற்றும் ஜாகீர், பிலிக்ஸ் ஆகியோர் உடந்தையுடன் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் கொள்ளையடித்த பணத்தை தனது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும், கொள்ளையடித்த பணத்தில் தனது கடனை அடைத்திருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக சுரேசின் கூட்டாளி களான எசனையை சேர்ந்த ராஜூ மகன் மணிகண்டன்(21), நூத்தப்பூரை சேர்ந்த கண்ணன்(47), துறை மங்கலத்தை சேர்ந்த ரமேஷ் (42) மற்றும் சுரேசின் மனைவி சங்கீதா, உறவினரான பாலசுப்ரமணியனின் மனைவி வசந்தா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.72 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான சுரேசை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்