குடிநீர் வினியோகம் செய்யக்கோரி, பொதுமக்கள் திடீர் சாலை மறியல் - விருத்தாசலத்தில் பரபரப்பு

விருத்தாசலத்தில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-11-24 22:15 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலம் அண்ணாநகர் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு நகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேடான பகுதியில் அண்ணாநகர் உள்ளதால், அனைத்து வீடுகளுக்கும் முறையாக குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், அருகில் உள்ள நகர் பகுதிகளுக்கு சென்று, தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கடந்த சில மாதங்களாக முற்றிலும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது.

இதனால் மேடான பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் முறையாக குடிநீர் கிடைக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். இருப்பினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் அப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நகராட்சி பொறியாளர் பாண்டு மற்றும் அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஓரிரு நாட்களுக்குள் மினிகுடிநீர் தொட்டி வைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்நிலையில் ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும், அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையே நகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்திற்கு குடிநீர் இணைப்பு கொடுப்பதற்கான பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள், குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல், தனியார் பள்ளிக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விருத்தாசலம்- காட்டுக்கூடலூர் புற வழிச்சாலை சந்திப்பில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானப்படுத்தி, இதுதொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்