மராட்டியத்தில், பா.ஜனதா ஆட்சி அமைத்து இருப்பது ஜனநாயகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம் - கனிமொழி எம்.பி. பேட்டி

மராட்டியத்தில் பா.ஜனதா ஆட்சி அமைத்து இருப்பது ஜனநாயகத்துக்கு இழைக்கப்பட்டு உள்ள மிகப்பெரிய துரோகம் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

Update: 2019-11-24 22:15 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கடந்த 2 நாட்களாக அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. நேற்று பல்நோக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

முகாமில் பல்வேறு நோய்களுக்கு மருத்துவ பரிசோதனைகள், எக்கோ, இ.சி.ஜி, ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன.

பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி தொகுதியில் உள்ள விமான நிலைய விரிவாக்கம் மற்றும் இரவு நேரத்தில் விமானம் தரையிறங்குவதற்கான வசதியும் தேவை. இதனை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மராட்டிய மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைத்து இருப்பது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி ஜனநாயகத்துக்கு இழைக்கப்பட்டு உள்ள மிகப்பெரிய துரோகம். யார் வெற்றி பெற்றாலும், நாங்கள்தான் அரசு அமைப்போம் என்ற மனநிலையில் மத்திய பா.ஜனதா அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இந்திய வங்கிகளை உலக அளவில் உயர்த்துவோம் என்கிறார்கள். முதலில் இந்திய பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்பையும், இந்திய தரத்துக்காவது உயர்த்த வேண்டும். தொடர்ந்து பொருளாதாரம் சரிவடையாமல் பாதுகாத்தார்கள் என்றாலே போதும். அதன்பிறகு உலக தரத்தை பற்றி பேசலாம்.

முதுநிலை மருத்துவ படிப்புகளில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு இல்லை என்று கூறி உள்ள மத்திய அரசு, பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு அறிவித்து இருப்பதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்