கொடைக்கானலில் இடைவிடாது சாரல் மழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடைக்கானலில் நேற்று இடைவிடாது பெய்த சாரல் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Update: 2019-11-24 21:45 GMT
கொடைக்கானல்,

‘மலைகளின் இளவரசி’ என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானலில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை சாரல் மழை இடைவிடாது பெய்தது. மலைப்பகுதிகள் முழுவதும் மேகமூட்டமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். பகல் நேரத்தில் முகப்பு விளக்குகளை போட்டபடியே வாகனங்களை இயக்கினர்.

இதனைத்தொடர்ந்து மதியம் முதல் மாலை வரை விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இந்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வாரச்சந்தை வியாபாரிகள் அவதியடைந்தனர். பலர் வீடுகளிலேயே முடங்கினர். மேலும் மலைப்பகுதி முழுவதும் கடும் குளிர் நிலவியது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிருக்கு பாதுகாப்பான உடைகளை அணிந்தபடியே நடமாடினர்.

இருப்பினும் நேற்று வார விடுமுறை தினம் என்பதால் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்திருந்தனர். அவர்கள் சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடியே படகு சவாரி மற்றும் சைக்கிள் சவாரி செய்து மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் செய்திகள்