சின்னசேலம் அருகே, டேங்கர் லாரி மீது கார் மோதல்; வங்கி ஊழியர் பலி - 4 பேர் படுகாயம்

சின்னசேலம் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் வங்கி ஊழியர் பரிதாபமாக இறந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-11-24 22:15 GMT
சின்னசேலம்,

சேலம் மாவட்டம் மன்னார்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 28). அதேபோல் அயோத்தியாபட்டணத்தை சேர்ந்தவர்கள் இளவரசன் (28), கார்த்திக் (18), நெத்திமேட்டை சேர்ந்த யுவராஜ் (28) மற்றும் சின்னதிருப்பதியை சேர்ந்த தினேஷ்ராஜ் (28). இவர்கள் 5 பேரும் சேலத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் 5 பேரும் ஒரு காரில் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு அவர்கள் சுற்றிபார்த்துவிட்டு மீண்டும் சேலம் நோக்கி புறப்பட்டனர்.

காரை தினேஷ்ராஜ் ஓட்டினார். விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர்-பங்காரம் இடையே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக முன்னால் ஆசிட் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது.

இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே சுரேஷ் பரிதாபமாக இறந்தார். இளவரசன் உள்ளிட்ட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இது குறித்த தகவலின் பேரில் சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதில் மேல்சிகிச்சைக்காக இளவரசன், தினேஷ்ராஜ் ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே விபத்தில் இறந்த சுரேசின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டேங்கர் லாரி டிரைவரான புதுச்சேரியை சேர்ந்த சவுந்தரராஜன் (33) என்பவரை கைது செய்தனர். இந்த விபத்தில் டேங்கர் லாரிக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

மேலும் செய்திகள்