புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் கலெக்டரிடம் பெண்கள் கோரிக்கை

புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கலெக்டரிடம் பெண்கள் கோரிக்கை வைத்தனர்.

Update: 2019-11-25 23:00 GMT
தஞ்சாவூர்,

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகளுக்கான நலச்சங்கத்தினர் மாவட்ட தலைவர் பகத்முகமது தலைமையில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் கோவிந்தராவை சந்தித்து மனு அளித்தனர்.

அதில், தஞ்சை மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பட்டியல் எழுத்தர், உதவியாளர், காவலாளி போன்ற பணிகளில் 150 மாற்றுத்திறனாளிகள் கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 2 ஆண்டுகள் பணி முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஏற்கனவே அமைச்சர், இயக்குனர், பொதுமேலாளரை சந்தித்து மனு அளித்து இருக்கிறோம். புதிதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டர் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மணல் அள்ள அனுமதி

சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமையில் நிர்வாகிகள் சிலர், கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கொள்ளிட கரையில் உள்ள மணல் குவாரியில் மணல் அள்ள 600 மாட்டு வண்டிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மணல் குவாரியில் உள்ள அதிகாரிகள், மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி அளிக்கவில்லை. இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பட்டா

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருமாந்துறை கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் அளித்த மனுவில், நாங்கள் பல ஆண்டுகளாக கோவில் நிலம் மற்றும் புறம்போக்கு இடங்களில் வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக வேறு எந்த இடமும் கிடையாது. எனவே நாங்கள் வசிக்கும் இடங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இலவச பஸ் வசதி

சிவசேனா கட்சி மாநில துணை தலைவர் புலவஞ்சி போஸ் தலைமையில் நிர்வாகிகள் சிலர், கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில், இந்து கோவில்களின் வருமானம் அரசின் பல்வேறு திட்டங்களுக்கு செலவு செய்யப்படுகிறது. தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு இலவசமாக பஸ் வசதியை தமிழகஅரசு செய்து தர வேண்டும். சொந்த வாகனத்தில் செல்பவர்களுக்கு டீசல் மானியம் வழங்க வேண்டும். சுங்கவரி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ஐயப்ப பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.2 ஆயிரம் மானியம் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆக்கிரமிப்பு அகற்றம்

நெம்மேலி கிராமத்தை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் கலெக்டரிடம் அளித்த மனுவில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மக்கள் பதிவேட்டில் எங்களது பெயரை சேர்க்க வேண்டும். வடசேரி ஏரியில் இருந்து எங்கள் கிராமத்திற்கு தண்ணீர் வரக்கூடிய வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்