மராட்டிய உணவு வகைகளை அறிந்து கொள்ள தஞ்சை வந்த ஜப்பான் தம்பதி

மராட்டிய உணவு வகைகளை அறிந்து கொள்ள தஞ்சைக்கு வந்த ஜப்பான் தம்பதியினர் தங்கள் நாட்டில் தமிழக உணவுக்கு மவுசு என தெரிவித்தனர்.

Update: 2019-11-25 22:30 GMT
தஞ்சாவூர்,

தமிழகத்தில் உள்ள பழமைவாய்ந்த கோவில்கள், சுற்றுலா தலங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவர்கள் கோவில் சிற்பங்கள், ஓவியங்களை கண்டு வியப்பில் ஆழ்ந்துவிடுகின்றனர். அதேபோலவே தமிழக உணவு வகைகளும் தன்வசம் ஈர்த்துவிடுகிறது. இட்லி, சாப்பாடு போன்றவை சுவையாக இருப்பதாகவும், சாம்பார், சட்னி மிகவும் பிடித்து இருப்பதாகவும் வெளிநாட்டினர் சொல்வதை கேட்கிறோம்.

வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களின் கலையாகும். இந்த கலை மிகவும் பிடித்து போவதால் தங்களது நாட்டிற்கு சென்றாலும் அதே வகை உணவுகளை தேடி சென்று வெளிநாட்டில் சாப்பிடுகின்றனர். ஜப்பான் நாட்டு மக்கள் தமிழக உணவு வகைகளை மிகவும் விரும்பி சாப்பிடுகின்றனர். அதுவும் செட்டிநாடு உணவுகள் அவர்களை கவர்ந்து இழுக்கிறது.

உணவு வகைகள்

இதனால் ஜப்பான் நாட்டில் உணவகம் நடத்தி வரும் தம்பதியினர் தமிழகத்திற்கு வந்து இங்கே உணவு வகைகள் எப்படி தயார் செய்கிறார்கள். அதற்கு என்னென்ன காய்கறிகள், மசாலா பொருட்கள் சேர்க்கப்படுகிறது என்பதை கேட்டறிந்து அந்த உணவு வகைகளை ஜப்பானில் தயார் செய்து அந்தநாட்டு மக்களுக்கு வழங்கி வருகின்றனர். இவர்களுக்கு மராட்டிய உணவு வகைகளை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

இதன்காரணமாக ஜப்பானை சேர்ந்த தம்பதியினரான சுசுகி, யூகி ஆகியோர் நேற்றுமுன்தினம் தஞ்சைக்கு வந்தனர். அவர்கள் மராட்டிய வம்சாவழிகளான சிவாஜி ராஜா போன்ஸ்லேவை நேரில் சந்தித்து மராட்டிய உணவு வகைகளை அறிந்து கொண்டனர். பின்னர் அந்த உணவுகளை எப்படி தயாரிப்பது என்பது குறித்து நேரில் பார்க்க விரும்பினர். இதனால் மராட்டிய குடும்பத்தில் 30 ஆண்டுகளாக சமையல் வேலை செய்து வந்த கல்பனா தஞ்சை கொண்டிராஜபாளையத்தில் வசித்து வருகிறார்.

கேசரிமாஸ்

அவரது வீட்டிற்கு ஜப்பான் தம்பதியினர் நேற்று நேரில் சென்றனர். அங்கு அவர்களுக்கு மராட்டிய உணவு வகைகளான கேசரிமாஸ், சும்டி ஆகியவை எப்படி செய்ய வேண்டும். அதற்கு என்னென்ன பொருட்களை சேர்க்க வேண்டும் என கல்பனாவும், அவரது உறவினர் சர்மிளாவும் செய்து காண்பித்தனர். சும்டி என்பது அசைவ, சைவ கோலாவாகும். ஆட்டு இறைச்சி, வாழைப்பூவை கொண்டு கோலா செய்யப்படுகிறது. அதில் விஷேசம் அந்த கோலாவில் கயிறு கட்டப் பட்டிருக்கும்.

கேசரிமாஸ் என்பது ஸ்வீட் அல்ல. அது ஒரு வகை அசைவ உணவு. ஆட்டின் தொடைக்கறி, எலுமிச்சம்பழம், மஞ்சள், மிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு, கசகசா ஆகியவற்றை சேர்த்து எண்ணையில் பொரித்து எடுக்கும் உணவு தான் கேசரிமாஸ். இதேபோல் உணவு வகைகளில் பாதாம்பருப்பு, வெங்காயம், தக்காளி, கிராம்பு போன்றவையும் சேர்க்கப்படுகிறது. உணவு சமைப்பதை நேரில் பார்த்த ஜப்பான் தம்பதியினர், இந்த உணவு வகைகள் செய்ய என்னென்ன பொருட்கள் எந்த அளவுக்கு தேவை என்பதை கேட்டறிந்து அவற்றை குறிப்பு எடுத்து கொண்டனர்.

3-வது முறை

இவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக மோகன் வந்திருந்தார். சமைக்கும்போது என்னென்ன செய்கிறார்கள் என்பது குறித்து ஜப்பான் நாட்டினருக்கு விளக்கி கூறினார். இது குறித்து ஜப்பான் நாட்டு தம்பதியினர் கூறும்போது, நாங்கள் தமிழகத்திற்கு 3-வது முறையாக வந்துள்ளோம். தமிழக உணவு வகைகளை எப்படி சமைப்பது என்பதை தெரிந்து கொண்டு அவற்றை எங்கள் நாட்டில் சமைத்து மக்களுக்கு வழங்குவோம். ஜப்பான் நாட்டில் தமிழக அசைவ, சைவ உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர். வாழை இலையில் சாப்பாடு வைத்து பொரியல், அவியல், சாம்பார், ரசம் சேர்த்து சாப்பிட விரும்புவர். மராட்டிய உணவு வகைகள் குறித்து கேள்விபட்டோம். அந்த உணவு வகைகளை அறிந்து கொள்வதற்காக வந்துள்ளோம். இந்த உணவுகளை எங்கள் உணவகத்தில் தயார் செய்து எங்கள் நாட்டு மக்களுக்கு வழங்குவோம். இதேபோல் சிறந்த இந்திய உணவுகளையும் அறிந்து கொள்ள இருக்கிறோம் என்றனர்.

மேலும் செய்திகள்