விளாத்திகுளம் அருகே, வைப்பாற்றில் மூழ்கி தொழிலாளி பலி

விளாத்திகுளம் அருகே வைப்பாற்றில் மூழ்கி தொழிலாளி பலியானார்.

Update: 2019-11-25 22:15 GMT
விளாத்திகுளம்,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரசன்குளத்தைச் சேர்ந்தவர் சுப்பையா (வயது 57). பானை தயாரிக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி அன்னவேல். இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். இவர்களில் 4 பேருக்கு திருமணமாகி விட்டது.

சுப்பையா கடந்த 22-ந் தேதி பக்கத்து ஊரான வி.வேடப்பட்டியில் உள்ள துக்க வீட்டுக்கு பானை கொண்டு சென்று வழங்கினார். பின்னர் மாலையில் அவர் தனது ஊருக்கு செல்வதற்காக, வி.வேடப்பட்டியில் இருந்து வைப்பாற்றின் குறுக்காக நடந்து சென்றார்.

தற்போது பெய்த மழையில் வைப்பாற்றில் வி.வேடப்பட்டி தடுப்பணையில் தண்ணீர் அதிகமாக தேங்கி உள்ளது. இந்த நிலையில் ஆற்றில் ஆழமான பகுதியில் சென்ற சுப்பையா எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே சுப்பையா மாயமானதால், அவருடைய குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் வி.வேடப்பட்டி வைப்பாற்றில் சுப்பையாவின் உடல் அழுகிய நிலையில் பிணமாக மிதந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், விளாத்திகுளம் போலீசார் விரைந்து சென்று, சுப்பையாவின் உடலை மீட்டனர். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்ததால், டாக்டர்கள் அங்கேயே பிரேத பரிசோதனை செய்து, அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் சுப்பையாவின் உடல், அரசன்குளத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்