மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: பஞ்சமி நிலங்களை மீட்டு தரக்கோரி கலெக்டரிடம் மனு

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் காரமடை சாஸ்திரி நகரை சேர்ந்த பொதுமக்கள் பஞ்சமி நிலங்களை மீட்டுதரக்கோரி மனு அளித்தனர்.

Update: 2019-11-25 22:00 GMT
கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, புதிய ரேஷன்கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தின் போது வேடபட்டியை சேர்ந்த தொழிலாளி ஜெகநாதன் திடீரென்று கலெக்டர் அலுவலகம் முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து, தர்ணா போராட்டம் நடத்த அனுமதியில்லை என்றும், கலெக்டரிடம் சென்று மனு அளிக்கும்படியும் கூறினார்கள்.

அப்போது ஜெகநாதன் கூறியதாவது:-

நான் கோவை வேடப்பட்டியில் வசித்து வருகிறேன். கடந்த 30 ஆண்டுகளாக ஆடுகள் வளர்த்து வருகிறேன். முன்விரோதம் காரணமாக சில நபர்கள் நான் வளர்த்து வந்த 4 ஆடுகளை விஷம் வைத்து கொன்று விட்டார்கள். இதுகுறித்து வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே ஆடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, எனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து அவரை சமாதானப்படுத்திய போலீசார், ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கலெக்டர் அலுவலத்தில் அளித்த மனுவில், தமிழகத்தில் பட்டியல் சாதி பிரிவில் உள்ள குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், வாதிரியார், தேவேந்திர குலத்தான் ஆகிய 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவித்து சான்றிதழ் பெற தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை பட்டியல் சாதி பிரிவில் இருந்து வெளியேற்றி வேளாண் மரபினர் என்ற புதிய பிரிவை கொண்டு வந்து அவர்களுக்கு இடஒதுக்கீடு மக்கள் தொகை அடிப்படையில் வழங்க வேண்டும். என்று கூறப்பட்டிருந்தது.

காரமடை பகுதியை சேர்ந்த தலித் மக்கள் மற்றும் சமூக நீதி கட்சி நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டம் காரமடை சாஸ்திரி நகரில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். 2013-ம் ஆண்டு பட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரையில் எந்த இடமும் காண்பிக்கவில்லை. எனவே அந்த பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு, வீடு இல்லாத தலித் சமூக மக்களுக்கு வழங்க வேண்டும் என்று உள்ளது.

தலித் மக்கள் விடுதலை கழக பொதுச்செயலாளர் முனுசாமி அளித்துள்ள மனுவில், அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை கோர்ட்டு வளாகத்தில் அம்பேத்கர் முழு உருவசிலை அமைத்து தர வேண்டும். மேலும் டிசம்பர் 6-ந் தேதி அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு செஞ்சிலுவை முன்பு அவரது உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தவும் அனுமதி வழங்க வேண்டும் என்று அதில் இருந்தது

கோவை நாகராஜபுரம் பிள்ளையார்புரத்தை சேர்ந்த மூதாட்டி சொர்ண கணி (வயது 72). இவர் முதியோர் உதவித்தொகை கேட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக அரசு பஸ்சில் பிள்ளையார் புரத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். அப்போது பஸ்சில் வைத்து மர்ம நபர் இவர் வைத்திருந்த ரூ.3,900-ஐ திருடி விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கலெக்டர் அலுவலகம் முன் அழுதபடி நின்று கொண்டிருந்தார். இது காண்போரை கண்கலங்க செய்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்