ஏழை மக்களின் நலனுக்காக மாநகராட்சி, ஊராட்சி பகுதிகளில் புதிய சமுதாய கூடங்கள் - ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் தகவல்

ஏழை மக்களின் நலனுக்காக மாநகராட்சி, ஊராட்சி பகுதிகளில் புதிதாக சமுதாய கூடங்கள் அமைக்கப்பட உள்ளதாக ஆய்வுக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

Update: 2019-11-25 22:30 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் மாநகராட்சி வார்டு பகுதிகளுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறதா? என்பது தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. இதற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மாநகராட்சியின் 48 வார்டுகளுக்கும் குடிநீர் வினியோகம் முறையாக செய்யப்படுகிறதா? என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். அப்போது அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் வழங்கப்படுவதாகவும், குடிநீர் பற்றாக்குறை இல்லாத அளவுக்கு அனைத்து வார்டு பகுதிகளுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதையடுத்து பொதுமக்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். பின்னர் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அமைச்சர், சில உத்தரவுகளை பிறப்பித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திண்டுக்கல் மாநகராட்சி வார்டு பகுதிகளில் சில இடங்களில் சாலை வசதி முறையாக செய்யப்படவில்லை என்று புகார் வந்துள்ளது. அந்த இடங்களை ஆய்வு செய்து உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஏழை மக்களின் நலனுக்காக மாநகராட்சி, ஊராட்சி பகுதிகளில் கூடுதலாக சமுதாய கூடங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இடங்களை தேர்வு செய்யும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இடம் தேர்வு செய்யப்பட்டதும், புதிதாக சமுதாய கூடங்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுவிடும். திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 4 சமுதாய கூடங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே சமுதாய கூடங்களுக்கான இடங்களை தேர்வு செய்யும் பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்