ராசிபுரம் அருகே மாவட்ட தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அமைச்சர் சரோஜா பணி நியமன ஆணைகள் வழங்கினார்

ராசிபுரம் அருகே மாவட்ட தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. அமைச்சர் சரோஜா பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Update: 2019-11-25 23:00 GMT
ராசிபுரம்,

ராசிபுரம் அருகே ஆண்டகளூர்கேட்டில் உள்ள திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் மணிமேகலை வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா கலந்து கொண்டு 163 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசுகையில், 2019-ம் ஆண்டில் மட்டும் 46 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதில் 526 தனியார் துறை நிறுவனங்களும், மற்ற நாடுகளில் இருந்து 4 ஆயிரத்து 614 நிறுவனங்களும் கலந்து கொண்டு 1,883 பேரை தேர்வு செய்தன. அவர்கள் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணி நியமன ஆணைகள் பெற்றுள்ளனர் என்றார்.

இதில் முன்னாள் எம்.பி. சுந்தரம், ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் பாலசுப்பிரமணியன், அட்மா குழு, காக்காவேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் காளியப்பன், ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் இ.கே.பொன்னுசாமி, மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் தாமோதரன், மோகனூர் சர்க்கரை ஆலை தலைவர் சுரே‌‌ஷ்குமார், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் புகழேந்தி, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ராதிகா, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மல்லிகா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி, மசக்காளிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் பிரகாசம், பட்டணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட முன்னாள் ஊராட்சிக்குழு உறுப்பினர் முருகேசன் மற்றும் பல்வேறு துறை அரசு அதிகாரிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், அ.தி.மு.க. பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உதவித்தொகை

இதேபோல ராசிபுரம் அரிமா சங்க கட்டிடம், எம்.எல்.ஏ. அலுவலகம் ஆகியவற்றில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது. அமைச்சர் சரோஜா கலந்து கொண்டார். முகாம்களில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல மனுக்கள் அளித்தனர்.

மனுக்களை பெற்ற அமைச்சர் அந்த மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்