குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 56 பேருக்கு ரூ.6 லட்சத்திற்கு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 56 பேருக்கு ரூ.6 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் வழங்கினார்.

Update: 2019-11-25 23:30 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். பொதுமக்கள் வீட்டுமனைபட்டா, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

மொத்தம் 296 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டாா்.

அதை தொடர்ந்து தமிழக முதல்- அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 6 பேருக்கு ரூ.18 ஆயிரத்து 500 மதிப்பில் கல்வி உதவித்தொகை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 பேருக்கு தலா ரூ.3 ஆயிரம் மதிப்பில் காதொலிக் கருவியும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, தாராபுரம், ஊத்துக்குளி, உடுமலை, மடத்துக்குளம், காங்கேயம் மற்றும் பல்லடம் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த 47 பேருக்கு தலா ரூ.12 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.5 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பில் இந்திரா காந்தி தேசிய முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணையும் வழங்கப்பட்டது.

இதில் மனு அளித்த 22 பேருக்கு உடனடியாக ஆணை வழங்கப்பட்டது. கூட்டத்தில் மொத்தம் 56 பேருக்கு ரூ.5 லட்சத்து 91 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிக்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட ஆர்.டி.ஓ. சுகுமார், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் விமல்ராஜ், துணை கலெக்டர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்