மத்திய அரசை கண்டித்து: காங்கிரஸ் சார்பில் இருசக்கர வாகன ஊர்வலம்

மத்திய அரசை கண்டித்து புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் இருசக்கர வாகன ஊர்வலம் நடந்தது.

Update: 2019-11-26 00:17 GMT
புதுச்சேரி,

நாட்டில் நிலவும் பொருளாதார சீர்குலைவுக்கு காரணமாக மத்திய அரசை கண்டித்து புதுவையில் நேற்று 2 சக்கர வாகனத்தில் கண்டன ஊர்வலம் நடந்தது. புதுவை பாரதி பூங்கா அருகே உள்ள குபேர் சிலையிலிருந்து ஊர்வலம் தொடங்கியது.

ஊர்வலத்துக்கு காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

ஊர்வலம் செஞ்சிசாலை, புஸ்சி வீதி, அண்ணாசாலை, ராஜா தியேட்டர் சிக்னல், நேரு வீதி, காந்தி வீதி, அஜந்தா சிக்னல், ஆனந்தா இன், காமராஜர் சிலை, நெல்லித்தோப்பு சிக்னல், இந்திராகாந்தி சிலை வழியாக சென்று ராஜீவ்காந்தி சிலையில் முடிவடைந்தது.

இந்த ஊர்வலத்தில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத், அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், தீப்பாய்ந்தான், விஜயவேணி, ஜான்குமார், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், முன்னாள் அமைச்சர் ஏழுமலை, துணைத்தலைவர்கள் வினாயகமூர்த்தி, தேவதாஸ், நீல.கங்காதரன், பொதுச்செயலாளர்கள் கருணாநிதி, தனுசு, செயலாளர்கள் காமராஜ், சாம்ராஜ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ், மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஊர்வல முடிவில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு ஏழைகளுக்கு எதிரான கொள்கைளை கொண்டதாக உள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக உள்ளது. மராட்டியத்தில் இப்போது ஜனநாயகத்தை படுகொலை செய்துள்ளனர். இரவோடு இரவாக ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்து பதவியேற்றுள்ளனர்.

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், கர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார், ஆகியோர் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குகள் போடப்பட்டு்ள்ளன. தீவிரவாதத்தினால் உயிரிழந்த முன்னாள் பிரதமர்களான இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோரின் குடும்பத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பினை மத்திய அரசு திரும்பப்பெற்றுள்ளது.

புதுவையில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அபார வெற்றிபெற்றுள்ளது. இதை உணர்ந்துகொண்டு புதுவை பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. பேசவேண்டும்.

புதுவை கவர்னர் கிரண்பெடி மக்களுக்கு எதிராக உள்ளார். மக்கள் நல திட்டங்களை தடுக்கிறார். அவரை மோடி ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்குகிறார். கவர்னர் மாளிகை பாரதீய ஜனதா கட்சியின் அலுவலகமாக மாறிவிட்டது.

முதல்-அமைச்சர் நாராயணசாமி தொழில் முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூருக்கு சென்று வந்ததை கவர்னர் கிரண்பெடி விமர்சிக்கிறார்.எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுக்கிறது. ராகுல்காந்தி பிரதமரானதும் மாநில அந்தஸ்து வழங்கப்படும். இவ்வாறு சஞ்சய்தத் கூறினார்.

மேலும் செய்திகள்