3-வது கணவருடன் சேர்ந்து 2-வது கணவரை கழுத்தை நெரித்து கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை - கோபி கோர்ட்டு தீர்ப்பு

3-வது கணவருடன் சேர்ந்து 2-வது கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோபி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.

Update: 2019-11-27 23:00 GMT
கடத்தூர், 

பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் அண்ணாநகரை சேர்ந்தவர் துரைமுருகவேல் (வயது 41). லாரி டிரைவர். ஏற்கனவே திருமணம் ஆகி குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்தவர் செல்வராணி (40). இவரும், ஏற்கனவே திருமணம் ஆனவர். இந்தநிலையில் துரைமுருகவேலுக்கும், செல்வராணிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து 2-வது கணவர் துரைமுருகவேலுடன் அண்ணாநகரில் செல்வராணி வசித்து வந்தார்.

துரைமுருகவேலின் நண்பர் ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த ராஜூ என்கிற ராஜா (52). இவரும் லாரி டிரைவர்.

ராஜா துரைமுருகவேலை பார்பதற்காக அடிக்கடி அண்ணா நகருக்கு சென்று வந்தார். அப்போது செல்வராணிக்கும், ராஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. துரைமுருகவேல் வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசமாக இருந்ததாகவும் தெரிகிறது.

இந்தநிலையில் செல்வராணி ராஜாவை 3-வது கணவ ராக திருமணம் செய்துகொண்டார்.

இதை அறிந்த துரைமுருகவேல் ஆத்திரமடைந்து மனைவியிடம், நீ என்னுடன்தான் குடும்பம் நடத்தவேண்டும் என்று கூறியுள்ளார். இதுபற்றி செல்வராணி தனது 3-வது கணவர் ராஜாவிடம் கூறினார். இதனால் இருவரும் சேர்ந்து துரைமுருகவேலை கொைல செய்ய திட்டமிட்டனர்.

அதன்படி கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந் தேதி ராஜா மதுவில் அதிக அளவில் தூக்க மாத்திரைகளை கலந்து, நைசாக பேசி துரைமுருகவேலுக்கு கொடுத்துள்ளார். அந்த மதுவை குடித்த துரைமுருகவேல் சிறிது நேரத்தில் ஆழ்ந்த மயக்கத்துக்கு சென்றுவிட்டார்.

அதன்பின்னர் செல்வராணியும், ராஜாவும் சேர்ந்து நைலான் கயிற்றால் துரைமுருகவேலின் கழுத்தை ெநரித்து கொலை செய்து உள்ளார்கள். பின்னர் அவர் தானாக தூக்கில் தொங்கியதுபோல் வீட்டின் விட்டத்தில் தொங்கவிட்டுள்ளார்கள்.

மறுநாள் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பவானிசாகர் போலீசார் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் செல்வராணியும், ராஜாவும் சேர்ந்து கொலை செய்தது அம்பலமானது. அதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், இதுகுறித்து கோபி 3-வது அமர்வு நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்கள்.

கடந்த 3 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த இந்த வழக்கில், கோபி 3-வது அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெகநாதன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் 2-வது கணவரை 3 வது கணவருடன் சேர்ந்து கழுத்தை ெநரித்து கொன்ற செல்வராணிக்கும், ராஜாவுக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்