120 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

திருச்சியில் 120 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2019-11-27 23:00 GMT
திருச்சி,

திருச்சி மாநகரில் சாலையோரம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள், வீடுகள் மற்றும் ஓட்டல்களை நெடுஞ் சாலைத்துறையினர் இடித்து அப்புறப்படுத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக திருச்சி-மதுரை ரோட்டில் எடமலைப்பட்டி புதூர் பிரதான சாலையில் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள், நிழற்கூரை உள்ளிட்டவற்றை அகற்றும்படி நெடுஞ்சாலைத்துறையினர் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி இருந்தனர்.

அதன்படி பலர், நேற்று முன்தினம் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டனர். டீக்கடை, காய்கறி கடைகள், பழக்கடை, மளிகைக்கடை, சிமெண்டு விற்பனை நிலையம், சவுண்ட் சர்வீஸ் உள்ளிட்ட கடைகளின் முன்புள்ள ஆக்கிரமிப்புகளை அவர்களை பிரித்து எடுத்தனர். ஆனால், கட்டிடங்கள், சிமெண்டு தளங்கள் உள்ளிட்டவற்றை அப்படியே எடுக்காமல் விட்டிருந்தனர்.

கட்டிடங்கள் இடித்து தரைமட்டம்

இந்த நிலையில் நேற்று காலை நெடுஞ்சாலைத்துறையின் திருச்சி கோட்ட பொறியாளர் கிரு‌‌ஷ்ணசாமி தலைமையில், உதவி கோட்ட பொறியாளர் ரவிக்குமார், உதவி பொறியாளர் வீரமணி, ஆய்வாளர்கள் பரமசிவன், செல்வவிநாயகம், புவனேசுவரி முன்னிலையில் 40-க்கும் மேற்பட்ட நெடுஞ் சாலைத்துறை பணியாளர்கள் 5 பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றினர். அப்போது, பிரச்சினை ஏதும் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதன்காரணமாக அந்த சாலையில் கடைகள் பெரும்பாலானவை அடைக்கப்பட்டன. மேலும் மின் வினியோகமும் நிறுத்தப்பட்டது. சாலையின் இருபுறமும் உள்ள 120 கடைகளின் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. அவற்றில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் முழுமையாக ஆக்கிரமிப்பில் இருந்ததால் அவை இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

கோவில்கள் அகற்றப்பட வில்லை

அதேநேரம், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் 2 இந்து கோவில்கள், ஒரு கிறிஸ்தவ ஆலய கெபி உள்ளிட்டவை இடிக்காமல் அப்படியே விடப்பட்டன. சாலையோர ஆக்கிரமிப்புகள் முழுமையாக இடித்து, சாக்கடை கால்வாய் அமைக்கும் போது, கோவில்களை இடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்