இடைத்தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) மீண்டும் கூட்டணியா? தேவேகவுடா பரபரப்பு பேட்டி

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு குமாரசாமி தலைமையில் நடைபெற்று வந்தது. அந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அதன் பிறகு இரு கட்சிகளும் கூட்டணியை முறித்துக் கொண்டன.

Update: 2019-11-27 23:15 GMT
பெங்களூரு, 

கூட்டணி அரசு கவிழ சித்தராமையாவே காரணம் என்று தேவேகவுடா, குமாரசாமி ஆகியோரும், குமாரசாமி தான் காரணம் என்று சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் பரஸ்பரம் குற்றம்சாட்டினர். இது சிறிது நாட்கள் மட்டுமே நீடித்தது. அதன் பிறகு இரு கட்சிகளின் தலைவர்களும் குற்றம்சாட்டுவதை நிறுத்திக் கொண்டனர். அந்த கட்சிகள் இன்னும் பகிரங்கமாக பெரிய அளவில் கருத்து மோதலில் ஈடுபடவில்லை. இந்த நிலையில் இடைத்தேர்தலுக்கு முன்பு தேவேகவுடா, இடைத்தேர்தலுக்கு பிறகு எடியூரப்பா அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை என்றும், தேவைப்பட்டால் பா.ஜனதா அரசை ஆதரிக்க தயாராக இருப்பதாகவும் கூறினார். மேலும் குமாரசாமி, எக்காரணம் கொண்டும் கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வருவதை விரும்பவில்லை என்று கூறினார். அவர்கள் இருவரும், எடியூரப்பா அரசை பற்றி மென்மையான கருத்துகளை தெரிவித்தனர்.

தேவேகவுடா, குமாரசாமி ஆகியோரின் இந்த கருத்து, எடியூரப்பாவுக்கு சற்று ஆறுதல் அளிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது நடைபெற்று வரும் இடைத்தேர்தல் பிரசாரத்தில், ஜனதா தளம்(எஸ்) தனது நிலையை மாற்றியுள்ளது. பா.ஜனதா சார்பில் போட்டியிடும் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களை தோற்கடிப்பதே தங்களின் நோக்கம் என்று காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூற தொடங்கியுள்ளன.

இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைக்காதபட்சத்தில், காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் இடையே மீண்டும் கூட்டணி மலர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடா நேற்று மைசூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் இடைத்தேர்தல் முடிவு வெளியான பிறகு என்ன நடக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். காங்கிரசில் சோனியா காந்தி சுப்ரீம் கோர்ட்டை போன்றவர். அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதை அக்கட்சியில் உள்ளவர்கள் அனைவரும் ஏற்க வேண்டும். கூட்டணி அரசு கவிழ்ந்த பிறகு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளிடையே உடனே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?. இடைத்தேர்தலுக்கு பிறகு பா.ஜனதா அரசுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால், நாங்கள் கூடி ஆலோசனை நடத்தி முடிவு எடுப்போம்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் இது தொடர்பாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “கர்நாடகத்தில் நடைபெற்று வரும் பா.ஜனதா அரசை கவிழ்க்க காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் திட்டம் தீட்டியுள்ளன. ஆனால் மாநில மக்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவாக உள்ளனர். எங்கள் கட்சி 15 தொகுதிகளிலும் வெற்றி பெறும்“ என்றார்.

மேலும் செய்திகள்