தாறுமாறாக ஓடிய லாரி வயலில் கவிழ்ந்தது லாரிக்கு அடியில் மாணவி சிக்கியிருப்பதாக டிரைவர் கூறியதால் பரபரப்பு

தஞ்சை அருகே தாறுமாறாக ஓடிய லாரி வயலில் கவிழ்ந்ததில் டிரைவர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவத்தின்போது லாரிக்கு அடியில் மாணவி சிக்கியிருப்பதாக டிரைவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-11-27 23:00 GMT
சாலியமங்கலம்,

தஞ்சை அருகே சாலியமங்கலம்-திருபுவனம் சாலையில் வடவாறு பாலம் பகுதியில் நேற்று ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி அங்கு உள்ள ஒரு வளைவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதன் காரணமாக சாலையில் தாறுமாறாக ஓடிய லாரி அங்கு உள்ள மின்கம்பம், மரங்கள் மீது மோதி விட்டு சாலை ஓரத்தில் உள்ள வயலில் கவிழ்ந்தது.

டிரைவர் படுகாயம்

இந்த விபத்தில் லாரி டிரைவர் உடையார்கோவில் வடபாதியை சேர்ந்த மகேந்திரன் (வயது35) என்பவர் படுகாயம் அடைந்தார்.

கவிழ்ந்த லாரிக்குள் சிக்கி கொண்ட அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவி சிக்கினாரா?

முன்னதாக சம்பவ இடத்துக்கு வந்த அம்மாப்பேட்டை போலீசார், லாரி டிரைவரிடம் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் சைக்கிளில் வந்த மாணவி ஒருவர் தனது லாரிக்கு அடியில் சிக்கி இருப்பதாக டிரைவர், போலீசாரிடம் கூறி உள்ளார்.

இதனால் பதறிய போலீசார் உடனடியாக தீயணைப்பு படை வீரர்களை வரவழைத்து ‘கிரேன்’ மூலமாக கவிழ்ந்த லாரியை தூக்கி மாணவி சிக்கி உள்ளாரா? என பார்த்தனர். ஆனால் லாரிக்கு அடியில் டிரைவர் கூறியது போல் எந்த மாணவியும் சிக்கவில்லை. இதன் பின்னரே போலீசார் நிம்மதி அடைந்தனர்.

விபத்து குறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

லாரிக்கு அடியில் மாணவி சிக்கியிருப்பதாக டிரைவர் கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்