மணல் திட்டால் கடலுக்கு செல்ல முடியாமல் மீனவர்கள் தவிப்பு கடல் முகத்துவாரத்தை தூர்வார வலியுறுத்தல்

அதிராம்பட்டினம் அருகே மணல் திட்டால் கடலுக்கு செல்ல முடியாமல் மீனவர்கள் தவித்து வருகிறார்கள். கடல் முகத்துவாரத்தை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2019-11-27 23:00 GMT
அதிராம்பட்டினம்,

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ளது கீழதோட்டம் கிராமம். ராஜாமடம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் 750-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் 200 நாட்டு படகுகள் மூலமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு அக்னி ஆற்று வெள்ளம் கடலுடன் கலக்கும் முகத்துவாரம் அமைந்துள்ளது. இந்த முகத்துவாரத்தில் பல அடி உயரத்துக்கு மணல் திட்டு உருவாகி உள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் தங்கள் படகுகளை கடலுக்குள் எடுத்து செல்ல முடியாத நிலையில் உள்ளனர். ஆற்று வெள்ளம் முகத்துவாரம் வழியாக கடலுக்கு செல்வதை மணல் திட்டு தடுத்து விடுகிறது.

மக்கள் அவதி

தற்போது மழைக்காலம் என்பதால் அக்னி ஆற்றில் அதிகளவு வெள்ளம் செல்கிறது. இந்த வெள்ளம் மணல் திட்டால் தடுக்கப்பட்டு மீனவ மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் புகுந்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மீனவ கிராமத்தின் பல இடங்களில் ஆற்று வெள்ளம் புகுந்து தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிகரித்து தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடும் ஆபத்து இருப்பதாக கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

அகற்ற வேண்டும்

மீன்பிடி தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்ட கீழதோட்டம் கிராம மக்கள் இந்த மணல் திட்டால் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்கள். இதுபற்றி கீழதோட்டம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கூறியதாவது:- கீழதோட்டம் பகுதியில் உருவாகி உள்ள மணல் திட்டு காரணமாக முகத்துவாரம் அடைபட்டுள்ளது.

இதை அகற்றவில்லை எனில் கிராமத்துக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். இந்த வழியாகத்தான் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியும். எனவே முகத்துவார பகுதியை முழுமையாக தூர்வாரி மணல் திட்டுகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மீனவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்