கோர்ட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடம் சேதம் போலீஸ் நிலையம் முற்றுகை

கோர்ட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உத்திரமேரூர் போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டது.

Update: 2019-11-27 22:15 GMT
உத்திரமேரூர், 

பொதுமக்கள் மற்றும் வக்கீல்கள் கோரிக்கையை ஏற்று வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் உத்திரமேரூர் கோர்ட்டுக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக வேடபாளையம் பொதுவிநியோக கிடங்கிற்கு அருகே 2 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு, ஒதுக்கியது. இந்த நிலையில் உத்திரமேரூர் வக்கீல்கள் சங்கம் சார்பில், ஒருசிலர் தங்களின் சுயநலத்திற்காக அப்பாவி மக்களை தூண்டிவிட்டு கோர்ட்டுக்கு சொந்தமான இடத்தில் அத்துமீறி நுழைந்து அந்த இடங்களை சேதப்படுத்தி உள்ளனர். எனவே அவர்களை கைது செய்ய வலியுறுத்தி வக்கீல்கள் உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இது தொடர்பாக போலீசார் 20-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வக்கீல்கள் கூறியதாவது:-

உத்திரமேரூர் கோர்ட்டு ஆரம்பிக்கப்பட்ட நாள்முதல் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதனால் போதிய வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

கடந்த 2009-ம் ஆண்டு கோர்ட்டுக்கு சொந்தக்கட்டிடம் கட்டுவதற்காக இடம் ஒதுக்கப்பட்டது. பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் இதுவரை பணிகள் நடைபெறவில்லை. அதற்கு பிறகு பணிகள் தொடங்கப்பட்ட மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், ஸ்ரீபெரும்புதூர் போன்ற இடங்களில் கோர்ட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.

எனவே விரைந்து உத்திரமேரூரில் கோர்ட்டுக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு இந்த அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் உத்திரமேரூர் வக்கீல்கள் சங்க தலைவர் மணி, செயலாளர் ஆதிகேசவன், பொருளாளர் சந்தானகிருஷ்ணன், வக்கீல்கள் சங்க நூலகர் ஆர்த்தி உள்பட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்