தொழிலாளியை எரித்துக்கொன்ற தாய், மகனுக்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு

கோவில்பட்டியில் தொழிலாளியை எரித்துக் கொன்ற வழக்கில் தாய், மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

Update: 2019-11-27 22:45 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 6-வது தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 50), கூலித் தொழிலாளி. இவருடைய உறவினர் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன்(52). இவர் பெயிண்டராக உள்ளார். இவருக்கும், சண்முகத்தின் மனைவி வள்ளியம்மாளுக்கும் இடையே பழக்கம் இருந்து வந்தது. இதனை சண்முகம் கண்டித்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் சண்முகம், முருகேசனை அரிவாளால் வெட்டினார். இதுதொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீசார் சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

சிறிது நாட்களுக்கு பிறகு சண்முகம் ஜாமீனில் வெளியில் வந்தார். கடந்த 23-1-2017 அன்று இரவு சண்முகம் வீட்டில் தனியாக படுத்து இருந்தார். அப்போது முருகேசன், அவருடைய தாய் செல்வி ஆகிய 2 பேரும் சண்முகம் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் திடீரென சண்முகம் மீது மண்எண்ணெயை ஊற்றி தீவைத்து எரித்துக் கொலை செய்தனர்.

இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகேசன், செல்வி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கவுதமன், குற்றம் சாட்டப்பட்ட முருகேசன், செல்வி ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு வக்கீல் கோமதி மணிகண்டன் ஆஜரானார்.

மேலும் செய்திகள்