வல்லநாடு அருகே, மாடு மிதித்து விவசாயி சாவு - வயலில் உழவு செய்தபோது பரிதாபம்

வல்லநாடு அருகே வயலில் உழவு செய்தபோது, மாடு மிதித்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-11-27 22:30 GMT
ஸ்ரீவைகுண்டம், 

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே வடக்கு காரசேரி நடுத்தெருவைச் சேர்ந்தவர் கணபதி. இவருடைய மகன் சுப்பையா என்ற ராஜா (வயது 35). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அப்பகுதியில் உள்ளது. அந்த நிலத்தில் நெல் பயிரிடுவதற்கு ராஜா திட்டமிட்டார். இதற்காக அவர், அந்த நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி, உழவு செய்வதற்கு தயாராக வைத்து இருந்தார்.

நேற்று காலையில் ராஜா தனது 2 காளை மாடுகளை ஏர் கலப்பையில் பூட்டி, வயலில் உழவு செய்தார். அப்போது ஏர் கலப்பையில் கட்டியிருந்த கயிறு அவிழ்ந்ததால், ஒரு காளை மாடு மிரண்டு ஓடியது. உடனே அந்த மாட்டை பிடிக்க முயன்ற ராஜா எதிர்பாராதவிதமாக சேற்றில் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது மற்றொரு மாடும் மிரண்டு ஓட முயன்றது. அப்போது அந்த மாடு காலால் ராஜாவின் வயிற்றின் அடிப்பகுதியில் மிதித்தது. இதில் பலத்த காயம் அடைந்த ராஜா அலறி துடித்தார். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இரவில் ராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராஜாவுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து உள்ளது. வயலில் உழவு செய்த விவசாயி மாடு மிதித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்