முதுமலை புலிகள் காப்பக பகுதியில், வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளன.

Update: 2019-11-27 22:15 GMT
மசினகுடி,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் சுமார் 688 சதுரகிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. முட்புதர் காடுகளை கொண்ட இந்த புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள், கரடிகள், செந்நாய்கள், மான்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும், இருவாச்சி பறவை, கழுகுகள், ஆந்தைகள் உள்பட 150-க்கும் மேற்பட்ட வகையான பறவைகளும் உள்ளன.

மிகவும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் வனவிலங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக புலிகளின் எண்ணிக்கை ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருகின்றன. அவற்றுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் நன்றாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சிறுத்தைப்புலி போன்ற அழிந்து வரும் பட்டியலில் உள்ள அரிய வனவிலங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளன. தற்போது 100-க்கும் மேற்பட்ட புலிகள், 80-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதனிடையே வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் சமீப காலமாக புலிகள், சிறுத்தைகள், கரடிகள் போன்ற அரிய வனவிலங்குகளை எளிதாக காண முடிகிறது.

இதில், முதுமலைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் வனத்துறை வாகனங்களில் சென்று வனவிலங்குளை நேரில் கண்டு ரசித்து செல்கின்றனர். வாகன சவாரி மற்றும் யானை சவாரி மூலம் செல்லும் சுற்றுலா பயணிகள், சாலையில் புலி நடந்து செல்வதையும், சிறுத்தை மரத்தின் மீது அமர்ந்து இருப்பதையும் கண்டு மகிழ்கின்றனர்.

அதேபோல் கரடி, காட்டு யானை, மான்கள் என மற்ற வனவிலங்குகளையும் சுற்றுலாப் பயணிகள் பார்த்து வருகின்றனர். இதனால் புலிகள் காப்பகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் மசினகுடியில் இருந்து சிங்காரா, சீகூர், மசினகுடி ஆகிய வனப்பகுதிகளுக்கு சூழல் சுற்றுலா திட்டத்தின் மூலம் இயக்கப்படும் ஜீப் சவாரியில் செல்லும் சுற்றுலா பயணிகளும் அதிகமான வனவிலங்குகளை ஆர்வமாக கண்டு ரசிக்கின்றனர். மேலும் சுற்றுலாப்பயணிகள் சிலர் தங்களுடைய செல்போன்களில் வனவிலங்குகளை படம் பிடித்து செல்கிறார்கள்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் அந்த வனவிலங்குளை காண்பதற்காக சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வருகிறார்கள். மிகுந்த பாதுகாப்புடன் அவர்களை வனப்பகுதிக்குள் அழைத்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வனவிலங்குகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வனப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்