‘‘எனது தங்கையை கடத்திச்சென்று திருமணம் செய்ததால் தீர்த்துக்கட்டினோம்’’ - புதுமாப்பிள்ளை கொலையில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்

“என்னுடைய தங்கையை கடத்திச்சென்று திருமணம் செய்ததால் தீர்த்துக்கட்டினோம்” என்று நெல்லை புதுமாப்பிள்ளை கொலையில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2019-11-28 23:30 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 52). இவருடைய மகன் நம்பிராஜன் (23). இவர் அங்குள்ள பால் பண்ணையில் வேலை செய்து வந்தார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த தங்கபாண்டி மகள் வான்மதி (19) என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இந்த காதலுக்கு வான்மதி வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நம்பிராஜன், வான்மதியை அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் நெல்லை டவுன் வயல்தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி இரவு, நம்பிராஜனை இரு வீட்டார் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர். டவுன்-குறுக்குத்துறை ரெயில்வே கேட் பகுதியில் நம்பிராஜனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். மேலும் ரெயில்வே தண்டவாளத்தில் அவரது உடலை போட்டுச் சென்றதால், ரெயில் சக்கரங்கள் ஏறியதில் நம்பிராஜன் தலை துண்டிக்கப்பட்டது.

இதுகுறித்து நெல்லை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். கொலையாளிகளை பிடிக்க நெல்லை மாநகர துணை போலீஸ் கமி‌‌ஷனர் சரவணன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் விமலன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, வான்மதியின் அண்ணன் செல்லச்சாமி (26), மறுகால்குறிச்சியை சேர்ந்த செல்லத்துரை (24), முருகன் (25) மற்றும் அதே ஊரை சேர்ந்தவரும், தற்போது டவுன் வயல் தெருவில் வசித்து வருபவருமான முத்துப்பாண்டியன், மறுகால்குறிச்சியை சேர்ந்தவரும், தற்போது திசையன்விளையில் வசித்து வருபவருமான விசுவநாதன் ஆகியோரை நேற்று முன்தினம் இரவு பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர் நேற்று 5 பேரையும் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட வான்மதியின் அண்ணன் செல்லச்சாமி, நம்பிராஜனை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

மறுகால்குறிச்சியில் நம்பிராஜன் மற்றும் அவருடைய நண்பர்கள் ஒரு குழுவாகவும், நாங்கள் தனி குழுவாகவும் செயல்பட்டு வந்தோம். 2 தரப்புக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வந்தது. நம்பிராஜன் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் நம்பிராஜன் என்னுடைய தங்கை வான்மதி பின்னால் சுற்றி வருவதை கண்டோம். உடனடியாக நான் என்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து நம்பிராஜனை எச்சரித்தேன். வான்மதியுடன் பழகுவதை நிறுத்திக் கொள்ளுமாறு கூறினோம்.

அப்போது நம்பிராஜன், என்னுடைய தங்கையை கடத்திச்சென்று திருமணம் செய்யப்போவதாக சவால் விட்டார். அப்படி நடந்தால் உனது தலையை எடுத்து விடுவேன் என்று நாங்களும் பதிலுக்கு சவால் விடுத்தோம். இதனிடையே நம்பிராஜன் சவால்விட்டபடி என்னுடைய தங்கையை கடத்திச்சென்று திருமணம் செய்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள், நம்பிராஜனை கொலை செய்து, சவால்விட்டபடி அவரது தலையை துண்டிக்க ரெயில் தண்டவாளத்தில் உடலை போட்டுச்சென்றோம். அதனால் நம்பிராஜன் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்று அனைவரும் நம்பிவிடுவார்கள் என கருதினோம். ஆனால் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

நம்பிராஜன் கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக, பல்வேறு விதமான வீடியோக்களை தயார் செய்து ‘டிக்டாக்’கில் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த வான்மதி வீட்டாருக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், இதனால் நம்பிராஜன் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்