மோட்டார் வாகன முன்னாள் ஆய்வாளர் உள்பட 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை கோர்ட்டு தீர்ப்பு

மோட்டார் வாகன முன்னாள் ஆய்வாளர் உள்பட 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2019-11-28 22:15 GMT
திருச்சி,

திருச்சி கம்பரசம்பேட்டையை சேர்ந்தவர் பிலால். இவர் திருச்சி-திண்டுக்கல் சாலையில் பிராட்டியூர் அருகே பொக்லைன் எந்திரம் விற்பனை செய்யும் நிறுவனத்தில் முகவராக பணியாற்றி வந்தார். கடந்த 2008-ம் ஆண்டு இவர் மூலமாக புதுக்கோட்டையை சேர்ந்த செல்வி என்பவர் பொக்லைன் எந்திர வாகனத்தை விலைக்கு வாங்கினார். அதை பதிவு செய்வதற்காக ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பிலால் விண்ணப்பித்து இருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்த பிரபாகரன், அலுவலக உதவியாளர் சவுந்திரபாண்டியன் ஆகியோர் பொக்லைன் எந்திர வாகனத்தை பதிவு செய்வதற்கு பிலாலிடம் ரூ.750 லஞ்சம் கேட்டனர். இது குறித்து பிலால் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் இருவரையும் லஞ்சம் வாங்கியபோது கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

2 பேருக்கு சிறை தண்டனை

இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கின் தீர்ப்பை நீதிபதி ரவிச்சந்திரன் நேற்று கூறினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட மோட்டார் வாகன முன்னாள் ஆய்வாளர் பிரபாகரன்(வயது 56), ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலக முன்னாள் உதவியாளர் சவுந்திரபாண்டியன்(66) ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து இருந்தார். 

மேலும் செய்திகள்