உடன்குடி அருகே பரபரப்பு: நிதி நிறுவன மேலாளரை காரில் கடத்தி தாக்குதல் - பங்குதாரர் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு

உடன்குடி அருகே நிதி நிறுவன மேலாளரை காரில் கடத்தி சென்று தாக்கிய பங்குதாரர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-11-29 22:15 GMT
உடன்குடி, 

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சந்தையடி தெருவைச் சேர்ந்தவர் இளையபெருமாள் (வயது 45). இவர் உடன்குடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றினார். மேலும், இவர் அந்த நிதி நிறுவனத்தின் லாபத்தில் பங்குதாரராகவும் இருந்தார். அந்த நிதி நிறுவனத்தின் பங்குதாரர்களாக அருள்செல்வம், சிவபாலன் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.

இந்த நிலையில் இளையபெருமாள் நிதி நிறுவனத்தில் ரூ.11 லட்சம் கையாடல் செய்ததாக கூறி, பங்குதாரர் அருள்செல்வம் தூத்துக்குடி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால் இளையபெருமாள் நிதி நிறுவனத்தில் இருந்து விலகி, உடன்குடி வடக்கு பஜாரில் புதிய நிதி நிறுவனத்தை நேற்று தொடங்க திட்டமிட்டு இருந்தார். இதற்காக அங்கு வாடகை கட்டிடத்தில் புதிய நிதி நிறுவனத்தை திறக்க ஏற்பாடு செய்தார். இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி இளையபெருமாள் உடன்குடி அருகே செட்டியாபத்து பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு காரில் வந்த மற்றொரு பங்குதாரரான சிவபாலன் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து, மோட்டார் சைக்கிளை வழிமறித்து இளையபெருமாளை காரில் கடத்தி சென்றனர். மேலும் அந்த காரில் வந்தவர்களில் ஒருவர், இளையபெருமாளின் மோட்டார் சைக்கிளையும் பறித்து ஓட்டிச் சென்றார்.

இளையபெருமாளை காரில் கடத்திக்கொண்டு, ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூர் காட்டுப்பகுதிக்கு சென்றனர். அங்கு இளையபெருமாளை நிர்வாணப்படுத்தி தாக்கியதாகவும், பின்னர் அவரை மிரட்டி வெற்று பேப்பரிலும், ரூ.100 மதிப்பிலான வெற்று பத்திரத்திலும் கையெழுத்து வாங்கியதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு இளையபெருமாளிடம் ஆடையையும், மோட்டார் சைக்கிளையும் கொடுத்து அனுப்பினர்.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த இளையபெருமாள் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சிவபாலன் உள்ளிட்ட 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். நிதி நிறுவன மேலாளரை காரில் கடத்தி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்