கோவில்பட்டியில், கார் மோதி மூதாட்டிசாவு - மகனுக்கு பெண் பார்த்துவிட்டு திரும்பியபோது பரிதாபம்

கோவில்பட்டியில் மகனுக்கு பெண் பார்த்துவிட்டு திரும்பியபோது கார் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-11-29 22:30 GMT
கோவில்பட்டி, 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி திலகர் நகரைச் சேர்ந்தவர் மாடசாமி. தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி கிரு‌‌ஷ்ணம்மாள் (வயது 60). இவர்களுடைய மகன் மகேந்திரன் (29). இவர் டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் படித்து விட்டு, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். மாடசாமி கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதனால் கிரு‌‌ஷ்ணம்மாள் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கிரு‌‌ஷ்ணம்மாள் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்வதற்கு பெண் பார்ப்பதற்காக, தன்னுடைய தம்பி குருசாமி உள்ளிட்ட உறவினர்களுடன் சென்னைக்கு சென்றார். பின்னர் அவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவில் சென்னையில் இருந்து ஆம்னி பஸ்சில் கோவில்பட்டிக்கு புறப்பட்டனர்.

நேற்று அதிகாலையில் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்காத ஆம்னி பஸ், அங்கு நாற்கர சாலையின் இடதுபுற சர்வீஸ் ரோட்டில் துணை மின்நிலையம் அருகிலேயே பயணிகளை இறக்கி சென்றது. இதனால் கிரு‌‌ஷ்ணம்மாள், குருசாமி மற்றும் அவர்களுடைய உறவினர்கள் உள்ளிட்ட பயணிகள், கூடுதல் பஸ் நிலையத்துக்கு செல்வதற்காக நாற்கர சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது சாத்தூரில் இருந்து நெல்லை நோக்கி சென்ற கார் திடீரென்று கிரு‌‌ஷ்ணம்மாளின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே கிரு‌‌ஷ்ணம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகிறார். மகனுக்கு பெண் பார்த்துவிட்டு திரும்பியபோது கார் மோதி மூதாட்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பெரும்பாலான ஆம்னி பஸ்கள் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்துக்கு செல்லாமல், அங்கு நாற்கர சாலையின் இடதுபுறத்திலேயே பயணிகளை இறக்கி செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அனைத்து பஸ்களும் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்துக்கு சென்று, பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும். அங்கு புறக்காவல் நிலையம் அமைத்து போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்