பூசாரி நியமனம் தொடர்பாக இரு தரப்பினரிடையே தகராறு: அனுமதியின்றி கோவிலுக்குள் நுழைய முயன்றவர்களை போலீசார் தடுத்ததால் பரபரப்பு

கோத்தகிரி அருகே அனுமதியின்றி கோவிலுக்குள் நுழைய முயன்றவர்களை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-11-29 22:15 GMT
கோத்தகிரி,

கோத்தகிரி வெஸ்ட்புரூக் அருகே பெத்தளா கிராமம் உள்ளது. இங்கு படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் குட்டுமனை என்ற பூசாரி குடும்பத்தை சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட சிறுவனை பூசாரியாக நியமிப்பது வழக்கம். தற்போது பூசாரியாக இருக்கும் சிறுவனுக்கு 18 வயது நிரம்பி விட்டால், அதே குடும்பத்தை சேர்ந்த மற்றொரு சிறுவன் பூசாரியாக நியமிக்கப்படுவான். இந்த வழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால் இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பெத்தளா ஹெத்தையம்மன் கோவிலில் சக்களத்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி புதிய பூசாரியை நியமிப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் குன்னூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அதில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் கோவிலுக்குள் சென்று தாங்களே பூஜைகளை செய்யப்போவதாக அறிவித்தனர். ஆனால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால், அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். மேலும் கோவிலுக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு முன்னாள் அமைச்சர் இளித்துரை ராமச்சந்திரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து, கோவிலுக்குள் நுழைய முன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் உதவி கலெக்டர் ரஞ்சித் சிங், சாந்தி ராமு எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்தது. அதன்பின்னர் இரு தரப்பினருக்கும் உதவி கலெக்டர் உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நாளை மறுநாளுக்குள்(அதாவது நாளைக்குள்) கோவிலுக்கு புதிய பூசாரி நியமிக்கப்பட வேண்டும். கோவில் கணக்குகள் மற்றும் நகை பெட்டியின் சாவி ஆகியவற்றை பராமரித்து வந்த பழைய பூசாரி, அவைகளை ஊர் பஞ்சாயத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் அதனை புதிய பூசாரியிடம் ஒப்படைப்பார்கள். சக்களத்தி பண்டிகை முடிந்த 2 மாதத்துக்குள் கோவில் நிர்வாகத்தை கவனிக்க அறக்கட்டளையை உருவாக்கி, அதில் இரு தரப்பை சேர்ந்தவர்களையும் பிரதிநிதிகளாக சேர்க்க வேண்டும். இதனை இரு தரப்பினரும் கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்