மயானத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு: மரவள்ளி கிழங்கு தோட்டம் வழியாக பிணத்தை தூக்கி சென்ற உறவினர்கள்

மயானத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் இறந்த பெண்ணின் பிணத்தை மரவள்ளி கிழங்கு தோட்டம் வழியாக உறவினர்கள் தூக்கி சென்று அடக்கம் செய்தனர்.

Update: 2019-11-29 23:00 GMT
அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஜம்மணஅள்ளி கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் மயானம் உள்ளது. இந்த மயானத்திற்கு செல்லும் சாலையை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் மயானத்திற்கு செல்ல போதிய பாதை வசதி இல்லை. இந்த கிராமத்தில் இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு எடுத்து செல்ல விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் ஜம்மனஅள்ளி கிராமத்தை சேர்ந்த வேடியப்பன் மனைவி பட்டம்மாள் என்பவர் இறந்துள்ளார். அவரது உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இறுதி சடங்கு செய்தனர். பின்னர் அவர்கள் அந்த பெண்ணின் உடலை மயானத்திற்கு அடக்கம் செய்ய எடுத்து சென்றனர். அவர்கள் நெல், மரவள்ளி பயிரிடப்பட்டுள்ள ேதாட்டங்களில் புகுந்து பெண்ணின் பிணத்தை மயானத்திற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.

இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், இது போன்ற நிகழ்வுகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. மயானம் மற்றும் மயானத்திற்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்த வழியாக இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே மயானம், பாதை ஆக்கிரமிப்பு இடங்களை மீட்டுத்தர வேண்டும். அல்லது வேறு இடத்தில் மயானத்திற்கு இடம் ஒதுக்கி தரவேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

அரூர் உதவி கலெக்டர் பிரதாப் கூறுகையில், ஜம்மணஅள்ளி கிராமத்தில் உள்ள மயானத்திற்கு செல்லும் பாதை, அரசு புறம்போக்கு நிலமா? அல்லது தனிப்பட்டவருக்கு சொந்தமான பட்டா நிலமா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். மயானம், பாதை ஆக்கிரமிப்பு செய்து இருந்தால், உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி மயானத்திற்கு தேவையான சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்