பாண்லே பாலின் தரம் குறித்து தவறான பிரசாரம் - அமைச்சர் கந்தசாமி வேதனை

பாண்லே பாலின் தரம் குறித்து தவறான பிரசாரம் செய்யப் படுகிறது என்று அமைச்சர் கந்தசாமி வேதனை தெரிவித்தார்.

Update: 2019-11-29 22:45 GMT
பாகூர், 

ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு சத்துமாவு கலந்த பால் வழங்கும் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. பள்ளி துணை ஆய்வாளர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சிவக் குமார் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கந்தசாமி கலந்துகொண்டு சத்துமாவு கலந்த பாலை மாணவர்களுக்கு வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து மாணவர்களுக்கு அரசு பல சலுகைகளை அளித்து வருகிறது. மாணவர்கள் அதனை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். நான் படித்த இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒருவராவது ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக வரவேண்டும் என்ற கனவு எனக்குள் இருந்து வருகிறது. அதனை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர், அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் கொண்டு வரும் திட்டங்களை காலம் கடத்தாமல் செயல்படுத்த அரசு உயர் அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும். வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் உயர்பொறுப்பில் இருப்பதால், நமது மாநிலத்திற்கு வேண்டிய திட்டங்களை செயல்படுத்த ஆர்வம் காட்டுவதில்லை. அதனால், நமது மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் ஆட்சி பணிக்கு வரவேண்டும்.

கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட மாணவர்களுக்கு ரொட்டி-பால் வழங்கும் திட்டம் தற்போது மேலும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பல சுவைகளில் புரதச்சத்து மிக்க பால் தற்போது மாணவர் களுக்கு வழங்கப்படுகிறது. புதுச்சேரி அரசு நிறுவனமான பாண்லே பாலில் தரம் குறித்து சிலர் தவறாக பிரசாரம் செய்து வருகின்றனர். பாலில் கலப் படம் இருப்பது ஆதாரத்துடன் நிரூபித்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்