சட்டசபையை முற்றுகையிட முயன்ற, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 200 பேர் கைது

சப்-இன்ஸ்பெக்டர் விபல்குமார் தற்கொலைக்கு நீதி விசாரணை கேட்டு சட்டசபையை முற்றுகையிட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-11-29 22:30 GMT
புதுச்சேரி,

புதுவை நெட்டப்பாக்கம் காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்த விபல்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் சப்-இன்ஸ்பெக்டர் விபல்குமாரின் தற்கொலை தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், அதற்கு பின்னணியில் உள்ள காவல்துறை உயர் அதிகாரியை கைது செய்யவேண்டும், அவரது குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகையை ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டசபையை முற்றுகையிடப்போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி அவர்கள் நேற்று கம்பன் கலையரங்கம் அருகே கூடினார்கள். அங்கிருந்து சட்டசபை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் பாவாணன் தலைமை தாங்கினார்.

ஊர்வலம் அண்ணாசாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக ஆம்பூர் சாலையை அடைந்தது. அப்போது அங்கு அவர்களை போலீசார் தடுப்பு கட்டைகளை அமைத்து தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் அதை தள்ளிக்கொண்டு செல்ல முயன்றனர்.

இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சூப்பிரண்டு மாறன் தலைமையிலான போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்தனர்.

கட்சி நிர்வாகிகள் கபிலன், ஏகவள்ளி, அன்பரசன், மணிமாறன், திருமாறன், விடுதலைவளவன், விடுதலை செல்வன், ஆற்றலரசு, ஈகையரசு, தீந்தமிழன் உள்பட சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்