‘உத்தவ் தாக்கரே அரசுக்கு மோடி ஒத்துழைக்க வேண்டும்’ சிவசேனா சொல்கிறது

மராட்டியம் டெல்லிக்கு அடிமை அல்ல என்று கூறி இருக்கும் சிவசேனா, உத்தவ் தாக்கரே அரசுக்கு பிரதமர் மோடி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளது.

Update: 2019-11-29 23:54 GMT
மும்பை, 

மராட்டியத்தில் பெரும் அரசியல் குழப்பத்துக்கு பிறகு சிவசேனா தலைமையில் புதிய கூட்டணி அரசு அமைந்து முதல்-மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் பதவி ஏற்றார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாம்னா'வின் தலையங்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மராட்டிய அரசியலில் சிவசேனா மற்றும் பாரதீய ஜனதா இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால், பிரதமர் மோடி, உத்தவ் தாக்கரே இடையே சகோதர ரீதியிலான உறவுகள் இருக்கிறது.

எனவே, மராட்டியத்தை சேர்ந்த அவரது இளைய சகோதரர் உத்தவ் தாக்கரே அரசுக்கும், மாநில வளர்ச்சிக்கும் ஒத்துழைக்க வேண்டிய பொறுப்பு பிரதமர் மோடிக்கு இருக்கிறது. மராட்டிய விவசாயிகளை அவர்களின் துயரங்களில் இருந்து மீட்பதற்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும்.

பிரதமர் மோடி எந்தவொரு கட்சிக்கும் சொந்தமானவர் அல்ல, இந்த தேசத்துக்கே பொதுவானவர். ஆதலால், மராட்டிய மக்கள் எடுத்து உள்ள முடிவை டெல்லி மதிக்க வேண்டும், மாநில அரசின் ஸ்திரத்தன்மை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மன்னர் சத்ரபதி சிவாஜியால் ஈர்க்கப்பட்ட மராட்டிய மண் வீரம் நிறைந்தது. மராட்டிய மாநில உருவாக்கத்திற்காக டெல்லியுடன் மாநில மக்கள் போராடினார்கள். டெல்லி நிச்சயமாக நாட்டின் தலைநகரம். ஆனால் மராட்டியம் டெல்லியின் அடிமை அல்ல என்பதில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்த பாலாசாகேப் தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரே இப்போது முதல்-மந்திரி ஆகிவிட்டார். எனவே, மராட்டிய அரசாங்கம் அதன் நிலைப்பாட்டை அப்படியே வைத்திருக்கும் என்பதில் உறுதியாக உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்