துவாக்குடி அருகே வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் பொதுமக்கள் அவதி சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு

துவாக்குடி அருகே வீடு களுக்குள் புகுந்த மழை நீரால் அவதிக்கு உள்ளான பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-11-30 23:00 GMT
துவாக்குடி,

துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான்கோட்டை, பெரியார் நகரில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக அங்குள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியிலும், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திரண்டு, சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், வாழவந்தான்கோட்டை கடைவீதியில் இருந்து பெரியார் நகருக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கட்டப்பட்ட சாக்கடையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து உள்ளார். இதனால் மழைநீர் செல்ல வழியின்றி, சாலையிலேயே தேங்கிவிடுகிறது. மேலும் மழைநீர் செல்ல முறையான வடிகால் இல்லாததால், குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து விடுகிறது. எனவே சாக்கடை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். மேலும் மழைநீர் வடிகால் வசதி யையும் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, மறியலில் ஈடுபடப்போவதாக, கூறினர்.

அப்புறப்படுத்த நடவடிக்கை

இதற்கிடையே இது பற்றி தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த மண்டல அலுவலர் (ஊராட்சி) நடராஜன், வாழவந்தான்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணி மற்றும் துவாக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைநீரை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் ஊராட்சிக்கு சொந்தமான சாக்கடையை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்