மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிய அதிநவீன கருவி

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிய அதிநவீன கருவியை புதுவை காவல்துறை பயன்படுத்த உள்ளது.

Update: 2019-11-30 22:45 GMT
புதுச்சேரி,

வார விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வருகின்றனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மது வகைகளை விரும்பியே புதுச்சேரி வருகின்றனர்.

இனி வருகிற நாட்கள் பண்டிகை, புத்தாண்டு தினங்களாக இருப்பதால் புதுவை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிநவீன கருவி

இவ்வாறு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டவும், அதனால் அதிக அளவில் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

இதை தடுக்கும் விதமாக மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிய காவல்துறைக்கு அதிநவீன கருவி வாங்கப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம் வாகனம் ஓட்டுபவர்கள் எந்த அளவுக்கு போதையில் உள்ளனர்? என்பதை துல்லியமாக கண்டறிய முடியும்.

10 ஆயிரம் பதிவுகள்

சோதனை செய்யும் இடம் எங்கு என்பதையும் அறிய ஜி.பி.எஸ். கருவியும் உள்ளது. மேலும் 10 ஆயிரம் பதிவுகளை இந்த கருவியிலேயே சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

இந்த நவீன கருவி 20 எண்ணிக்கையில் புதுவை போக்குவரத்து காவல்துறைக்கு வாங்கப்பட்டுள்ளது. இதை எவ்வாறு பயன்படுத்துவது? என்பது குறித்து போக்கு வரத்து போலீசாருக்கு நேற்று செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. டெல்லியை சேர்ந்த பங்கஜ் என்பவர் இந்த விளக்கத்தை அளித்தார்.

நிகழ்ச்சியில் போக்கு வரத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகாபட், போலீஸ் சூப்பிரண்டுகள் முருகவேலு, சுப்ரமணியன் இன்ஸ்பெக்டர்கள் ஜெய ராமன், முருகையன், வரதராஜன், ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்