ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு: வீடுகளில் கழிப்பறை வசதி செய்து கொடுக்க விருதுநகர் கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் வீடுகளில் கழிப்பறை வசதி செய்து கொடுக்க விருதுநகர் கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-11-30 23:15 GMT
மதுரை, 

விருதுநகர் மாவட்டம் பெரியவாடியூரை சேர்ந்த திரவியம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், `எங்கள் ஊரில் களம் மற்றும் பாதையை நான் ஆக்கிரமித்துள்ளதாகவும், இதனை உடனடியாக அகற்றாவிட்டால், அதிகாரிகள் அகற்றுவார்கள் எனவும் சிவகாசி ஆர்.டி.ஓ. மற்றும் தாசில்தார் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். எனக்கு எந்தவித நோட்டீசும் அளிக்கவில்லை. விளக்கமும் பெறப்படவில்லை. எனவே அதிகாரிகளின் உத்தரவை ரத்து செய்து, நான் விளக்கம் அளிக்க வாய்ப்பு தர உத்தரவிட வேண்டும்' இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் விசாரித்தனர். அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, ஆக்கிரமிப்பு தொடர்பான விசாரணையில் மனுதாரர் மகன் பங்கேற்றார். ஆனால் அவர் எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை என கூறினார்.

பின்னர் மனுதாரர் வக்கீல் ஆனந்தமுருகன் ஆஜராகி, ‘‘மனுதாரர் எந்த ஆக்கிரமிப்பிலும் ஈடுபடவில்லை. அவர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் பகுதியில் தான் கிராமத்து மக்கள் தங்களின் இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுவது உறுதி செய்யப்பட்டால் அதை அகற்ற போதிய அவகாசம் அளிக்க வேண்டும். அதன்படி மனுதாரர் நடக்காதபட்சத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கலாம். அதேபோல புகார் அளித்தவர்கள் ஆக்கிரமித்திருந்தால் அவர்களுக்கு நோட்டீஸ் ெகாடுத்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை கொண்டாடும் வேளையில் திறந்தவெளி கழிப்பிடம் இருப்பதாக மனுதாரர் வக்கீல் கூறுகிறார். இதை முக்கியத்துவத்துடன் பார்க்க வேண்டு்ம். எனவே சம்பந்தப்பட்ட கிராமத்தில் வீடுகளில் கழிப்பறை கட்டிக் ெகாடுப்பதற்கான நடவடிக்கைகளை விருதுநகர் கலெக்டர் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்